மதுரையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான சம்பவத்தில் தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு: தெற்கு ரயில்வே நடவடிக்கை

சென்னை: மதுரையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான சம்பவத்தில் தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ஆன்மீக சுற்றுலா வந்திருந்தோர் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டுள்ளனர் அப்போது எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. இது குறித்த விசாரணையில் ரயில்பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து நேரிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் வெடித்து சிதறியதுபோது விறகு கட்டைகள் வைத்திருந்த கழிவறைக்குள் விழுந்ததால் அதுவும் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் விறகுகள், மண்ணெண்ணெய் கேன்கள், பாத்திரங்கள், சமையல் எண்ணெய் கண்டெடுக்கப்பட்டது. விபத்துக்கு உள்ளான ரயில் பெட்டியில் அதிக அளவு சமையல் பாத்திரங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான ரயில்வே அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில். உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த பாசின் டிராவல்ஸ் நிறுவனம் மீது ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தனியார் சுற்றுலா நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ போலீசாருக்கு தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

The post மதுரையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான சம்பவத்தில் தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு: தெற்கு ரயில்வே நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: