ரீத்தாபுரம் பேரூராட்சியில் கவுன்சிலர்களின் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது

குளச்சல்,ஆக.25: குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர். வார்டு கவுன்சிலர்களும் சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இந்தநிலையில் இருதினங்களுக்கு முன் கவுன்சிலர்கள் பிராங்கிளின், ஷோபா, சுசீலா, சிந்து, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செயல் அலுவலர் சங்கர்கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு ஆகியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் கவுன்சிலர்கள் அன்று இரவு முழுவதும் உள்ளிருப்பில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் காலையும் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.

இவர்களுடன் பேரூராட்சி தலைவர் எட்வின்ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன், 14 வது வார்டு கவுன்சிலர் ஷீலா ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றனர். நேற்றுமுன்தினம் 2 வது நாளாக நடந்த போராட்டத்திற்கு மாலையாகியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்த செயல் அலுவலர் சங்கர் கணேஷ், தலைவர் எட்வின் ஜோஸ் ஆகியோர் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். அப்போது ஆர்.டி.ஓ. தலைமையில் 2 நாட்களில் சுமூக முடிவு காணப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்கள் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் போராட்டத்தை கை விட்டுவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் கவுன்சிலர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post ரீத்தாபுரம் பேரூராட்சியில் கவுன்சிலர்களின் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது appeared first on Dinakaran.

Related Stories: