முயல் வேட்டைக்கு சென்ற 2 பேர் மின்வேலியில் சிக்கி பலி

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே, இடையபட்டி கிராமத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் பருத்தி, கம்பு, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியையொட்டி உள்ள வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால், விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க விவசாயிகள் கண்மாயை ஒட்டிய பகுதிகளில் அனுமதியின்றி மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் இடையபட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கருப்பசாமி (21), அலப்பலச்சேரியைச் சேர்ந்த சிவராமன் மகன் அனுமந்த ராஜா (17), மணி மகன் மனோஜ் (29) ஆகியோர் கண்மாய் பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது மூவரும் மின்வேலியில் சிக்கியுள்ளனர். இதில், மின்சாரம் பாய்ந்து கருப்பசாமி, அனுமந்த ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மனோஜ் படுகாயமடைந்தார்.

மூவரும் மின்வேலியை மிதித்தபோது, பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி ஏற்பட்டு மின்தடை உருவாகியுள்ளது. இதையடுத்து கிராமத்தை சேர்ந்த சிலர், கண்மாய் பகுதிக்கு சென்று பார்த்தபோது அனுமந்தராஜா, கருப்பசாமி ஆகியோர் இறந்ததும், மனோஜ் காயமடைந்து கிடந்ததும் தெரிய வந்தது. தகவலறிந்து வந்த நாகையாபுரம் போலீசார் இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும், மனோஜை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

The post முயல் வேட்டைக்கு சென்ற 2 பேர் மின்வேலியில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: