விலையுயர்ந்த பைக் வாங்குவதற்காக கோயில்களில் கொள்ளை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் அதிரடி கைது: ஒரு நாள் திருட்டில் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த தென்னூர் பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் கோலாத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோயில்களில் கடந்த 20ம் தேதி அதிகாலை சுமார் 1 மணி அளவில் புகுந்த 2 கொள்ளையர்கள் உண்டியலை உடைத்ததோடு, அம்மன் கழுத்தில் கிடந்த தாலியையும் திருடினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கோயிலில் திருடிய 2 கொள்ளையர்கள் சுவாமியார்மடத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பகல் சுமார் 3 மணி அளவில் திருவட்டார் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சுவாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது 2 பேரும் சேர்ந்துதான் 2 கோயில்களில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிடிபட்டவர்கள் சுவாமியார்மடம் நெடியாங்கோடு மேல்விளை பகுதியை சேர்ந்த கிரீஷ் மகன் சபரீஷ் (22) மற்றும் புலிப்பனம் கல்நாட்டிவிளை புன்னைக்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் சபரீஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: எனது பெயர் சபரீஷ். நான் 10ம் வகுப்பு பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டேன். தற்போது சென்டிரிங் வேலை செய்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கலை சேர்ந்த இளம்பெண்ணுடன் எனக்கு திருமணம் ஆகியது. ஒருவயதில் மகன் உள்ளார்.

என் மீது திருவட்டார், தக்கலை காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்கு, மார்த்தாண்டத்தில் ஒரு வழக்கு, கருங்கலில் கஞ்சா வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 17 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் கஞ்சா பழக்கத்திலேயே நட்பாகினோம். விலையுயர்ந்த பைக் வாங்க பல இடங்களில் பணம், நகைகளை திருட திட்டமிட்டோம். இதற்காக ஒவ்வொரு பகுதியாக சென்று ரகசியமாக நோட்டமிட்டோம். அதன்படி கடந்த பிப்ரவரி 22ம் தேதி செறுகோல் கும்பளம் பகுதியில் உள்ள மகாதேவர் கோயிலுக்கு சென்று வெண்கல குத்துவிளக்குகளை திருடினோம். அதனை 7 வயது சிறுவனின் வீட்டருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் இருந்த கல்லறைக்கு பின்னால் மறைத்து வைத்தோம். நீண்ட நாளாகியும் போலீசாரால் எங்களை நெருங்க முடியவில்லை என்பது தெரிந்தது.

ஆகவே கடந்த 8ம் தேதி நள்ளிரவில் வலியாற்றுமுகம் இசக்கியம்மன் கோயிலுக்குள் புகுந்து ஆணி பிடுங்கும் இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து குத்துவிளக்குகளை திருடினோம். அவற்றையும் 17வயது சிறுவன் வீட்டருகே உள்ள கல்லறைக்கு பின்னாலேயே பதுக்கி வைத்தோம். இதையடுத்து கடந்த 20ம் தேதி அதிகாலை கண்ணங்கரை வனசாஸ்தா கோயிலுக்கு சென்று அங்குள்ள பத்ரகாளியம்மன், துர்க்கையம்மன் சன்னதியின் பூட்டை உடைத்து தாலி சுட்டிகளை திருடினோம். உண்டியலையும் உடைத்து பணத்தை மூட்டையாக கட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். வரும் வழியில் தென்னூர் பத்ரகாளியம்மன் கோயில் இருப்பதை கண்ட நாங்கள் உடனடியாக அங்கு சென்று உண்டியலை உடைத்து பணத்தை அள்ளினோம். பின்னர் ஒருமணியளவில் கோலாத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலியை திருடினோம்.

அப்போது சத்தம் கேட்டதால் அருகே உள்ள வீட்டில் வசித்த தம்பதி வெளியே வந்து எங்களை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் 2 பேரும் கோயில் பின்பக்கம் உள்ள சுவரில் ஏறிகுத்து ரப்பர் தோட்டத்துக்குள் பதுங்கிவிட்டோம். பரபரப்பு ஓய்ந்தவுடன் 2 பேரும் அங்கிருந்து நடையை கட்டினோம். நகைகளை அதே கல்லறைக்கு பின்னால் மறைத்து வைத்தோம். உண்டியல் பணத்தை மட்டும் பங்குபோட்டு ஜாலியாக செலவளித்தோம். ஒருநாள் மட்டும் திருடியதில் இவ்வளவு கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தோம். இதேபோல் மீண்டும் திருடவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சபரீஷ் கூறினாராம். இதையடுத்து சபரீஷ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்த போலீசார் அவர்கள் ரப்பர் தோட்டத்தில் உள்ள கல்லறைக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த நகைகள் மற்றும் குத்துவிளக்குகளை பறிமுதல் செய்தனர். ஒருநாளில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தில் சினிமாவையும் மிஞ்சியதாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

The post விலையுயர்ந்த பைக் வாங்குவதற்காக கோயில்களில் கொள்ளை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் அதிரடி கைது: ஒரு நாள் திருட்டில் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: