அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் 2-வது சுற்று ஆட்டம் தொடங்கியது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா – நார்வேயை சேர்ந்த கார்ல்சன் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
முதல் சுற்று சமனில் முடிவடைந்த நிலையில் இன்று 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இன்று கருப்பு நிற காய்களுடன் விளையாடி வருகிறார்.
போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 35-வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார். 2ஆவது சுற்று போட்டியும் டிராவில் முடிந்தால் ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 20ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்தியர் நுழைந்துள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரலாறு படைப்பாரா பிரக்ஞானந்தா?
இன்றைய சுற்றில் வென்றால் செஸ் உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைப்பார். 18 வயதே நிரம்பிய சென்னை மாணவர் பிரக்ஞானந்தா, இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் உடன் மோதுகிறார். உலகம் முழுவதும் உள்ள செஸ் ரசிகர்கள், பிரக்ஞானந்தா – கார்ல்சன் மோதலை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். உலகின் முதல்நிலை வீரரான கார்ல்சனை ஏற்கனவே 5 முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
The post வரலாற்று சாதனை படைப்பாரா தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா..?: உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் 2வது சுற்று ஆட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.