மகாலட்சுமி தலங்கள்

திருக்கண்ணமங்கை

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவச்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். மேலும், தேனீக்களின் வடிவில் கூடு கட்டி பெருமாளை தரிசித்தபடி இருந்தனர்.

பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று.

திருநின்றவூர்

மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் இத்தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதனமாக என்னைப் பெற்ற தாயே என்று இரைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயே எனும் திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை – திருவள்ளூருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

கூடலூர்

இக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சமாக புளிய மரம் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும். கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் போன்றோர் உள்ளனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவற்றில் ராசி சக்கரமும் இதன் மத்தியில் மகாலட்சுமியும் காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.

திருவாலி

மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள்.

பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.

தொகுப்பு: நாகலட்சுமி

The post மகாலட்சுமி தலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: