ஆத்துப்பாக்கம் கிராமத்தில் பிடாரி ஆரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

 

கும்மிடிப்பூண்டி: ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நடந்த பிடாரி ஆரியம்மன் கோயில் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்மிடிபூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி பிடாரி ஆரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடம் தோறும் கூழ் ஊற்றி, பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிடாரி ஆரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது. இதில், பிடாரி ஆரியம்மனுக்கு, பாலபிஷேகம், நெய் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆண்டாள் தெரு, மேடவாசி தெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் கூழ் ஊற்றியும், பொங்கல் வைத்தும், பிடாரி ஆரியம்மனை வழிபாடு செய்தனர்.

பின்னர் இன்னிசை நிகழ்ச்சியுடன் பிடாரி ஆரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கிராம மக்கள், ஆடு வெட்டி தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் கும்மிடிப்பூண்டி, தேர்வழி, வழுதலம்பேடு, சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு, பெத்தகுப்பம், புதுகும்மிடிப்பூண்டி, முத்துரெட்டிகண்டிகை, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கிராம பெரியோர்கள் முன் நின்று நடத்தினர்.

The post ஆத்துப்பாக்கம் கிராமத்தில் பிடாரி ஆரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: