ஆவணியில் ஆதவன் வழிபாடு!

தட்சிணாயன காலத்தைச் சார்ந்த ஆவணி மாதத்தை ஜோதிட சாஸ்திரம் ’சிங்க மாதம்’ என்று கூறுகிறது. இந்த மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், இம்மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் போற்றப்படுகின்றன. கிழமைகளில் சூரியனின் ஆதிக்கம் நிறைந்தது ஞாயிற்றுக்கிழமை என்கின்றன வேத நூல்கள். மேலும், உலகிற்கு ஒளிதரக்கூடிய ஞாயிறு ஆட்சிபுரியும் ஆவணி மாதம் முழுவதும் சூரியன்தன் சொந்த ராசியில் இடம்பெறுவதால் சிங்கம்போல வீறுநடைபோடுவதாக ஞானநூல்கள் கூறுகின்றன.

ஆவணியில் சூரிய பகவான் சிம்மச்சூரியன் என்று தனிப்பெருமை பெறுவதால், அத்தகு மகிமை கொண்ட மாதத்தில் சூரியனை வழிபட நலன்கள் யாவும் கைகூடும். எனவே, ஜாதகத்தில் சூரியனின் பலம்குன்றியவர்கள் இந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட்டால் சூரியபலம் பெற்றுத் திகழலாம். மற்றவர்கள் மேன் மேலும் பலம்கூடி வளமாக வாழ்வர் என்று சாஸ்திரம் கூறுகிறது.

தட்சிணாயன காலத்தின் ஆரம்ப மாதமான ஆடி மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் தவிர்க்கப்பட்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவதுபோல், ஆவணியில் சுபகாரியங்கள் மேற்கொள்ள நல்ல முகூர்த்த நேரங்கள் உள்ளதால் திருமணம் போன்றசுபநிகழ்ச்சிகள் நடைபெற சிங்க மாதமாக ஆவணி திகழ்கிறது.

பொதுவாக, சூரியன் நமஸ்காரப்பிரியன் என்று சொல்லப்படுவதால், தினந்தோறும் சூரிய உதய காலத்தில் இந்திரதிசை என்று சொல்லப்படும் கிழக்கு நோக்கி வழிபாடு செய்தால் கண்ணொளி பிரகாசிக்கும்; உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று ஆன்மிகம் சொல்வதை அறிவியலும் ஏற்கிறது. சூரியனிலிருந்து கிடைக்கும் உயிர்ச்சத்தான வைட்டமின் -டி நம் உடல்நலனைப் பேணிக்காப்பதில் முதலிடம் வகிப் பதாக விஞ்ஞானம் கூறுகிறது. ஆகவே, காலையில் சூரிய வழிபாடு மேற்கொள்வதால் நலம் பல பெற்று வளமுடன் வாழலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

உயிர்சக்தியினை அளிக்கும் சூரியன் ஆவணியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கூடுதலான சக்தியை வெளிப்படுத்துவதால், அன்று சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுவதும் – குறிப்பாக ஆதித்யஹிருதயம், ஸ்தோத்திரங்கள் படிப்பதும், காயத்ரி மந்திரங்கள் ஜபிப்பதும் சிறப்பான பலன்களைத் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்று சிவன்கோயில் அமைந்துள்ள நவகிரகத்தொகுப்பில் நடுநாயகமாக வீற்றிருக்கும்சூரிய பகவானுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சில சிவன்கோயில்களில் சூரியனுக்கென்று தனிச்சன்னிதியும் அமைந்திருக்கும். அந்தச் சன்னிதியில் நெய் விளக்கேற்றி சூரிய காயத்ரியினை ஜெபிக்க அறிவிற்சிறந்து விளங்கலாம்.

The post ஆவணியில் ஆதவன் வழிபாடு! appeared first on Dinakaran.

Related Stories: