* மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகை
இந்த உலகம், அண்டாதி அண்டங்கள் எல்லாம் இணைத்து சக்தியால் உருவானது .அண்டங்களை இயக்குவது இந்த பிரபஞ்ச சக்தி(Power of Universe). எல்லாவற்றையும் இயக்குவது மட்டுமல்ல எல்லாவற்றையும் தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான். இதை உணர்ந்து கொண்டாடினால், நவராத்திரியின் விசேஷமான பலனை, நம் மனிதகுலம் முழுமையாகப் பெறும். மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகை தான் நவராத்திரி. இதில் முப்பெரும் தேவியர்களை (வீரம்,செல்வம்,ஞானம்) வணங்குகின்றோம். முப்பெரும் ஆற்றலும் இணைந்தால் கிடைக்கும் மகத்தான வெற்றியின் குறியீடாக தசமி அன்று “விஜயதசமி” விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம், அந்த மனிதன் ஒரு உயிராக, மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் படிப்படியாக மலர்வதை குறித்ததாகவே (progressive) இருக்கிறது.
* பெண்மையைப் போற்றும் பண்டிகை
சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பிரசித்தமாக இருக்கும். சில பண்டிகைகள் நாடு முழுவதும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும். நவராத்திரி பண்டிகை இந்தியாவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும் விரிவாகக் கொண்டாடப்படும் பண்டிகை. பெண்மையை சக்தியாகக் கொண்டாடும் நமது சமய மரபு, சிவராத்திரியை ஒரு நாளைக்கு வைத்துவிட்டு, நவராத்திரியை ஒன்பது நாள்களுக்கு என்று வைத்து வணங்கிப் போற்றிய தத்துவத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வியின் பெருமை
களையும், கலைகளின் பெருமைகளையும், குணத்தின் சிறப்பையும், ஞானத்தின் அருமையையும் பேசும் பண்டிகை இது. மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன; நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன – ஆனால், நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக்கொள்ள முடியாது. மனிதனாக இருப்பதன் பெருமையே விருப்பம் இருந்தால் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான். அதுதான் சாரதா நவராத்திரி என்கின்ற இந்த நவராத்திரியின் சிறப்பு.
* நவராத்திரி கொலு
நவராத்திரியில் கொலு என்பது விசேஷம். பல்வேறு விதமான பொம்மைகளை படிகளில் அடுக்குவார்கள். இந்த படிகள் கீழிருந்து மேலே ஒவ்வொன்றும் உயரமாகப் போய்க் கொண்டே இருக்கும். கீழ்ப்படியில் சாதாரண மனித உருபொம்மைகளை அல்லது விலங்குகளை அல்லது தாவரங்களை வைப்பவர்கள், மேல்படியில் பராசக்தியை அல்லது இஷ்ட தேவதையை வைத்து நிறைவு செய்வார்கள். ஒவ்வொரு மனிதனும் படிப்படியாக உயர வேண்டும், வான் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் அந்த நிலையை அடைந்து தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்பதுதான் நவராத்திரி கொலுப் படிகள் நோக்கம்.
* அஷ்டமி, நவமி, தசமி
நவராத்திரியில் கன்னி பூஜை என்பது விசேஷமானது. முதல் நாள் இரண்டு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயதுகூட உள்ள சிறுமியை அம்பாளாக பாவித்து வணங்குகின்ற கன்னி பூஜை சிறப்பானது. அது மட்டும் இல்லை, இந்த ஒன்பது நாள்களிலும் அம்பிகையை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து பூஜை செய்வார்கள். மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபடுவார்கள். இந்த ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் குறைந்தபட்சம் அஷ்டமி, நவமி, தசமி முதலிய நாள்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும். நவராத்திரி நாள்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூக்கள் கொடுக்க தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
* காலம் காலமாக இருக்கும் வழிபாடு
துர்க்கை வழிபாடு என்பது காலம் காலமாக இருப்பது. சங்க இலக்கிய காலத்திலிருந்து பின்பற்றப்படும் வழிபாடு. கொற்றவை வழிபாடு என்பது பாலை நிறத்திற்கு உரியது.
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத்திணை இயல் சூத்திரம்)
கொற்றவை அல்லது காளி என்று பல பெயர்கள் இந்த தெய்வத்திற்கு உண்டு. அதில் ஒரு பெயர் ஸ்கந்த மாதா. முருகனுக்கு தாய். முருகன் சூரசம்காரம் செய்த போது வேல் தந்தவள் அல்லவா. எனவே கூர்மையான மதியும் எதிரிகளை வெல்லும் (பகையை வெல்லும்) ஆற்றலையும் பெற, துர்க்கையின் அருள் வேண்டும்.
The post தொட்டதை துலங்க வைக்கும் நவராத்திரி appeared first on Dinakaran.