நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி

1. நவராத்திரி சிறப்பு

இதோ நவராத்திரி வந்துவிட்டது. “காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி; ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி” என்று ஒரு பாடல் உண்டு. 3ம் தேதி ஆரம்பித்து, 12ம் தேதிவரை நவராத்திரி. நவராத்திரி என்று ஒன்பது ராத்திரிகளைச் சொன்னாலும், பத்தாம் நாள் வெற்றிக் குரிய விஜயதசமியோடுதான் இந்த பண்டிகை நிறைவு பெறுகிறது. இது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அற்புதமான பண்டிகை. அது மட்டுமல்ல, 10 நாட்களும் வீடுகளிலும் கோயில்களிலும் ஒரு சேரக் கொண்டாடப்படும் பண்டிகை என்பது இந்த பண்டிகைக்கு சிறப்பு. கோயில்களில்கூட சைவக் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் நவராத்திரி உற்சவம் களைகட்டும். புரட்டாசி மாதம் தேய்பிறை மகாளயபட்சம் முடிந்ததும் தெய்வ வழிபாட்டுக்குரிய நவராத்திரி ஆரம்பித்துவிடும். அதன் சிறப்பை முப்பது முத்துக்களாகக் காண்போம்.

2. ஏன் 9 நாட்கள்?
எண்களில் மிக உயர்ந்த எண் ஒன்பது. ஒன்பதுக்கு மேல் ஒரு எண் இல்லை. இனி அதைவிட அதிகமான எண் பெற வேண்டும் என்று சொன்னால், அதோடு எதையாவது கூட்ட வேண்டும். நவம் என்பது 9 என்கிற எண்ணிக்கையோடு புதுமை என்கிற பொருளையும் சேர்ந்து தரும். ‘‘நவ நவங்களான ஜோதி நாளும், நாளும் தோன்றலாம்’’ என்பார் கவியரசு கண்ணதாசன். நவரத்தினங்கள் நவரசங்கள் என்று 9 என்ற எண்ணுக்கு அற்புதமான விளக்கங்கள் இருக்கின்றன. சமய உலகில் ஒன்பது எண் (9) மிகச் சிறந்த எண்ணாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான கோயில் உற்சவங்கள் ஒன்பது நாட்கள். பெரிய உற்சவமாக நடத்தப் படுகிறது. எண் கணித சாஸ்திரத்தில் முதல் எட்டு எண்கள் வெவ்வேறு ஆங்கில எழுத்துக்களுக்குக் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. அந்தந்த எண்களுக்கும் ஒவ்வொரு கிரகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்பது என்கிற எண், எந்த எழுத்துக்கும் கொடுக்கப்படவில்லை. அது பூமி காரகனான செவ்வாய்க்கு உரிய எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, கர்மாவின் அமைப்பையும் அதன் பலனையும் உயர்வையும் சொல்லுகின்ற எண்ணாக 9 உள்ளது.

3. சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும் நவராத்திரி

ஜோதிட சாஸ்திரத்தில் 9 என்கின்ற எண் யோகத்தைக் குறிப்பிடுகின்றது. ஒன்பதாம் இடத்தில் இருக்கக் கூடிய கிரகங்களும், ஒன்பதாம் இடத்துக்கு உரிய கிரகங்களும், மிகப் பெரிய நன்மையைச் செய்யும் என்பது ஜோதிட சாஸ்திர விதி. தமிழ் பக்தி இலக்கியத்தில், இறைவனைப் பற்றி அருளாளர்கள் பாடுவார்கள். ஒவ்வொரு பத்துப் பாடல்களையும், பதிகம் என்று குறிப்பிடுவார்கள். அதில் ஒன்பது பாடல்கள் இறைவனின் பெருமையையும், சிறப்பையும் சொல்லி, பத்தாவது பாடல் இந்த ஒன்பது பாடல்களைப் பாடுவதால் ஏற்படும் பலனைக் குறிப்பிடுவதாக (பலச்சுருதி) இருக்கும். நவராத்திரியில் 9 நாட்கள் பூஜை செய்து, பத்தாம் நாள் வெற்றி பெறுகிறோம். அதை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.

4. பாரதி மஹா சக்தியிடம் கேட்கும் வரம்

நவராத்தியில் புதிய புதிய நன்மைகளைப் பெறுகிறோம். புதிய கலை வடிவங்கள், புதிய பாடல்கள், புதிய அலங்காரங்கள் என ஒவ்வொன்றிலும் புதுமை நாடி இன்பம் பெறுகிறோம். பாரதியிடம் நவம் எனில் புதுமை எனும் பொருளில் உயர்ந்த கவிதை வரியொன்றுண்டு.
“விசையுறு பந்தினைப் போல் – உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவம் எனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்’’
– என்றார்
நசை – ஆசை, இச்சை, விருப்பு, நவம் – புதுமை, தினந்தினம் புதிதெனச் சுடர்
விடும் உயிர் வேண்டும் என்பது பாரதியின் பிரார்த்தனை. திருவாசகம் நவம் எனும் சொல்லைப் புதுமை எனும் பொருளில் கையாள்கிறது.

5. அதென்ன சக்திக்கு இவ்வளவு பெரிய சிறப்பு?
அதென்ன சக்திக்கு இவ்வளவு பெரியசிறப்பு? சக்திக்கு என்ன பொருள். சக்தி உபாசகனான மகாகவி பாரதியே இதற்கு விளக்கம் தருகிறார்.
“துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி.
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி,
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி,
பாம்பை அடிக்கும் படையே சக்தி,
பாட்டினில் வந்த களியே சக்தி,
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,
மாநிலங் காக்கும் மதியே சக்தி,
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சல நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி,
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.’’
இதெல்லாம் பெறுவதற்காகத்தான் நவராத்திரி கொண்டாடுகிறோம்.

6. உலகத்தில் எல்லாம் சக்திமயம்
பாரதியிடம் ஏகோபித்த அன்பைப் பெற்ற பாரதிதாசன் அடிக்கடி பாரதியின் இல்லத்திற்குச் சென்று வரும் வாய்ப்பினைப் பெற்றார். ஒரு நாள் பாரதியார், குயில் சிவா, வ.வே.சு ஐயர், போன்றோர் குழுமியிருந்தனர். அப்போது பாரதிதாசன் பற்றி அவர்கள் பேசலாயினர். பாரதியார் கனகசுப்புரத்தினம் கவிதை எழுதுவதில் வல்லவர் என்றுகூற, உடனே கூடியிருந்தவர்கள் ஒரு கவிதை புனையுமாறு கேட்டனர். பாவேந்தர் அப்பொழுது இயற்றிய கவிதை வரிகள்தாம் இவை;

“எங்கெங்கு காணினும் சக்தியடா; தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா! அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ? எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!’’

7. அன்னை எப்போது நேர்படுவாள் தெரியுமா?

“காளை ஒருவன் கவிச்சுவையைக் கரை
காண நினைத்த முழு நினைப்பில் அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’’

8. ஏன் மஹாலட்சுமியை நடுவில் வைத்தார்கள்?

இந்தப் பண்டிகையில் முதல் மூன்று நாட்கள் வீரத்திற்கு தேவதையான அன்னை பராசக்திக்கும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்திற்குரிய தேவதையான அன்னை மகாலட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் கல்விக்குரிய தேவதையான சரஸ்வதிக்கும் எனப் பிரித்து இந்த விழா கொண்டாடப்படுகிறது. ‘‘முப்பெரும் தேவியர்’’ என்று இவர்களைச் சொல்வார்கள். இதில், கல்வி, செல்வம், வீரம் என்று வரவேண்டும். ஆனால் வீரம், செல்வம், கல்வி என்று மாறி இருக்கிறது. இதில் எந்த வழியில் பார்த்தாலும் செல்வம் இடையில் இருக்கிறது. செல்வம் இடையில் இருக்கிறது என்று சொன்னால், அது இடையில் வந்து இடையிலே செல்வது. செல்வம்’. எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது. அது செல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால், அதைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வீரம் வேண்டும். அதை முறையாகச் செலவு செய்வதற்கும், பிறருக்கு உதவி செய்வதற்கும் அறிவாகிய கல்வி வேண்டும். எனவேதான், செல்வத்தை இடையில் வைத்து, வீரத்தையும் கல்வியையும் அந்தச் செல்வத்தை காப்பாற்றுகின்ற முறையிலே முன்னும் பின்னும் அரணாக வைத்தார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான சிந்தனை.

9. பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவ பூஜை

புரட்டாசி அமாவாசை மிக முக்கியமானது. மஹாளய அமாவாசை என்று பெயர். இதற்கு முன் 15 நாட்கள் பிதுர்பூஜை. இதற்கு அடுத்து 10 நாட்கள் தேவ பூஜை மகாளய அமாவாசை முடிந்ததும், நவராத்திரி தொடங்குகிறது. பிதுர்பூஜை முடிந்த கையோடு, தேவபூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள ராத்திரி என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது. மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சிணாயனம் என்றால் இரவு. இது தட்சிணாயனத்தின் கொண்டாடப்படும் பண்டிகை. அடுத்து இரவில் கொண்டாடப்படும் பண்டிகை. புதுமையான பலன் தரும் பண்டிகை. ஒன்பது நாள் இரவுக் காலம் கொண்டாடும் பண்டிகை. இவையெல்லாம் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள்.

10. பெண்மையைப் போற்றும் பண்டிகை

சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பிரசித்தமாக இருக்கும். சில பண்டிகைகள் நாடு முழுவதும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும். நவராத்திரி பண்டிகை இந்தியாவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும் விரிவாகக் கொண்டாடப்படும் பண்டிகை. பெண்மையை சக்தியாகக் கொண்டாடும் நமது சமய மரபு, சிவராத்திரியை ஒரு நாளைக்கு வைத்துவிட்டு, நவராத்திரியை ஒன்பது நாட்களுக்கு என்று வைத்து வணங்கிப் போற்றிய தத்துவத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வியின் பெருமைகளையும், கலைகளின் பெருமைகளையும், குணத்தின் சிறப்பையும், ஞானத்தின் அருமையையும் பேசும் பண்டிகை இது. மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன; நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன ஆனால், நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக்கொள்ள முடியாது. மனிதனாக இருப்பதன் பெருமையே விருப்பம் இருந்தால் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான். அதுதான் சாரதா நவராத்திரியின் சிறப்பு.

11. ஆற்றலை உணர்த்தும் பண்டிகை

இந்த உலகம், அண்டாதி அண்டங்கள் எல்லாம் இணைத்து சக்தியால் உருவானது. அண்டங்களை இயக்குவது இந்த பிரபஞ்ச சக்தி (Power of Universe). எல்லாவற்றையும் இயக்குவது மட்டுமல்ல எல்லாவற்றையும் தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான். இதை உணர்ந்து கொண்டாடினால், நவராத்திரியின் விசேஷமான பலனை, நம் மனிதகுலம் முழுமையாகப் பெறும். மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் முப்பெரும் தேவியர்களை (வீரம், செல்வம், ஞானம்) வணங்குகின்றோம். முப்பெரும் ஆற்றலும் இணைந்தால் கிடைக்கும் மகத்தான வெற்றியின் குறியீடாக தசமி அன்று “விஜயதசமி” விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம், அந்த மனிதன் ஒரு உயிராக, மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் படிப்படியாக மலர்வதை குறித்ததாகவே (progressive) இருக்கிறது, பத்தாவது நாளான விஜயதசமி. பூரணமாக மலர்ந்து வெற்றியடைந்து விட்டதைக் குறிக்கிறது.

12. தினமும் சொல்லுங்கள் துக்க நிவாரண அஷ்டகம்

காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சியம்மனைப் போற்றி இயற்றப்பட்ட துக்க நிவாரண அஷ்டகம். இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் படத்திற்கு தீபம் ஏற்றி, மனமொன்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால், உங்களை பாடாய்படுத்தும். அனைத்து துன்பங்களும் நீங்கும். வீட்டின் தரித்திர நிலை மாரி, செல்வ சேகரம் ஏற்படும். குடும்பத்தினர் நலம் பெறுவார்கள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகி செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளை அடையும்.

“சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.
தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி’’

13. காலம் காலமாக இருக்கும் வழிபாடு

துர்க்கை வழிபாடு என்பது காலம் காலமாக இருப்பது. சங்க இலக்கிய காலத்திலிருந்து பின்பற்றப்படும் வழிபாடு. கொற்றவை வழிபாடு என்பது பாலை நிறத்திற்கு உரியது.
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
கொற்றவை அல்லது காளி என்று பல பெயர்கள் இந்த தெய்வத்திற்கு உண்டு. அதில் ஒரு பெயர் ஸ்கந்த மாதா. முருகனுக்கு தாய். முருகன் சூரசம்காரம் செய்த போது வேல் தந்தவள் அல்லவா. எனவே கூர்மையான மதியும் எதிரிகளை வெல்லும் (பகையை வெல்லும்) ஆற்றலையும் பெற, துர்க்கையின் அருள் வேண்டும்.

14. சாக்தம்

சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து, காத்து, தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும். நாடெங்கும் துர்க்கைக்கு ஆலயங்கள் உண்டு. சக்தி வழிபாட்டை அறுசமய வழிபாட்டில் ஒன்றாக வைத்தார்கள். சாக்த வழிபாடு என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டை ஆயிரக்கணக்கான மக்கள், மற்ற வழிபாட்டைவிட அதீத ஆர்வத்துடன் செய்கிறார்கள். அம்மன் வழிபாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் யார்? அது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும், செயலாற்றலையும் தருகிறது. தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி வைத்தார்கள்.

15. ராத்திரி வழிபாடு

அது என்ன ராத்திரி வழிபாடு? பொதுவாகவே “ராத்திரி” என்பது இருட்டைக் குறிக்கும். இருள் என்பது புத்தியின் மயக்க நிலையைக் குறிக்கும். ‘‘நெஞ்சகம் இருளானால் வஞ்சக எண்ணங்கள் தானே தோன்றும்’’ என்பார்கள். இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது. இந்த அஞ்ஞானம் என்பது தனியான ஒரு பொருளோ, தத்துவமோ அல்ல. ஒளி இன்மை, அறிவின் மையின் பிரதிபலிப்புதான் அஞ்ஞானம். இருப்பது என்பது ஒளி. இல்லாதது என்பது இருள். இல்லாததை இருப்பதாக மாற்றுவதற்குத் தான் நவராத்திரி வழிபாடு. இதில் சக்தியின் ஆற்றலை (ஒளியை) வணங்குகின்றோம். ஆற்றலைப் பெறுகின்றோம்.

16. மகிஷாசுர மர்த்தனி

“மகிஷாசுர மர்த்தனி” என்று துர்க்கையைக் கொண்டாடுகிறோம். மகிஷம் என்றால் எருமை. எருமை தலையோடு கூடிய அசுரனை, சிங்க வாகனம் ஏறி அழித்தவள் பராசக்தி. இது புராணக் கதையாக இருப்பினும், இதன் தத்துவ சிறப்பு அபாரமானது. எருமையின் நிறம் கருப்பு. (ராத்திரி) எருமையின் குணம் தாமசம் (தமஸ்). மனிதர்களிடம் தெளிவின்மையாகிய இருட்டும் தமஸ் குணமும் மிஞ்சி நிற்கும் போது, அவன் ஆற்றல் நேர்வழியில் செல்லாது. துர்குணங்களே மிகும். தமஸ் குணம், ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும். தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப் பெருக்கினால் ராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிக்கின்றது. தமோ குணத்தினால், உறக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துயரத்தைத் தரும். இந்த குணத்தைத் தானே போக்கிக் கொள்ள முடியாது. அதை அழிக்க (மர்த்தனம்) வேண்டும். நவராத்திரி முதல் மூன்று நாள் வழிபாட்டில் அசுர குணங்களாகிய இருட்டையும், தமஸ் எனும் குணத்தையும் முற்றிலும் நீங்க பிரார்த்திக்கிறோம்.

17. நவ துர்க்கை

துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை நவதுர்க்கை என்ற பதத்தால் குறிப்பிடுவார்கள்.
“பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம்
திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா
சதுர்த்தமம் பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி
ஷஷ்டமம் காத்யாயனீம் சப்தமம் காலராற்றிச்ச
அஷ்டமம் கௌரிநிம் நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்”
– என்று ஒரு ஸ்லோகம் உண்டு.
சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால், அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.

18. துர்க்கை என்ன பொருள்?
துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும், தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது. மேலும், இவளை துர்காதேவி, ஆர்த்திதேவி, ஜோதிதேவி என்றும்
அழைக்கப்
படுகிறாள்.
1. துர்காதேவி – தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்.
2. ஆர்த்திதேவி அல்லது ஆராத்திதேவி என்பதாகும் துர்கை தனது உக்கர நிலையில் நெருப்பு வடிவில் ஒளி தருபவளாக மற்ற கடவுக்கு ஆராத்தி தீபமாக அருள் வடிவில் ஒளி தருகிறாள் என்று வட மாநிலங்களில் துர்கையை ஆர்த்திதேவி என்று
கூறுகின்றனர்.
3. ஜோதிதேவி துர்கை நாம் ஏற்றும் திரி விளக்கில் தீபமாக ஒளிர்கிறாள் எனவே ஜோதிதேவி என்றும் வட மாநிலங்களில் கூறுகின்றனர்.
மேலும், இந்த துர்கையின் இரண்டு வடிவமான ஆர்த்திதேவி / ஜோதிதேவி உடன் பிறந்த சகோதரிகள் என்றும் நெருப்பும் துர்கையும் ஒன்று என வட மாநிலங்களில் கருதப்படுகின்றது.

19. துர்க்கையின் பல வடிவங்கள்

பொதுவாக ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை நிழல் அல்லது இருள் கிரகங்கள் என்பார்கள். ஒன்று தலை இன்னொன்று வால். ஒளியாகிய சூரியனையும் சந்திரனையும் விழுங்கும் வல்லமை பெற்றவை இந்த கிரகங்கள். எனவேதான் இவர்களால் சூரிய சந்திர ஒளி மங்குவதை “கிரகணம்” என்கிறோம். இந்த கிரகணம் நல்லறிவை செயல்படவிடாது முடக்கும். இந்த முடக்கத்தை நீக்குவதுதான் துர்க்கை வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

20. வடக்கு வாசல் செல்வி
பெரும்பாலான ஆலயங்களில் வடக்கு பிராகாரத்தில், வடக்கு நோக்கி துர்க்கை சந்நதி இருக்கும். வைணவ ஆலயங்களிலும் துர்க்கை சில இடங்களில் உண்டு. துர்க்கையை கண்ணனின் சகோதரியாக சித்தரிக்கிறது நமது புராணங்கள். வடக்கு நோக்கிய துர்க்கை சந்நதிகள் இருப்பதால், வடக்கு வாசல் செல்வி என்று சொல்வார்கள். பராசக்தி என்றும் அவளுக்குப் பெயர். காளிதாசன் சியாமளா என்ற பெயரில் அழைக்கிறான். காளிதாசன் முதல் முதலில் இயற்றிய நூல் சியாமளா தண்டகம். நவராத்திரியில் அவசியம் பாராயணம் செய்ய வேண்டியது காளிதாசனின் சியாமளா தண்டகம். ஒவ்வொன்றும் உருக வைக்கும் பாடல்கள். அதில் ஒரு பாட்டு;
“மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி’’
பொருள்: விலையுயர்ந்த ரத்தினங்களால் ஆன வீணை வாசிக்கும் மாதங்காவின் மகளை நான் தியானிக்கிறேன். இதை நவராத்திரியில் பாராயணம் பண்ணலாம்.

21. பகவதி

கேரள தேசத்தில், அவள் பகவதி என்று அழைக்கப்படுகிறாள். ‘‘பகவான்’’ என்ற சங்கதச் சொல்லின் பெண்பாலாகும். தமிழில், அன்னைத் தெய்வங்களை, ‘‘அம்மன்’’ என்றழைப்பது போல், கேரளத்தில் ‘‘பகவதி’’ என்று சொல்வது வழக்கமாகக் காணப்படுகின்றது. கேரளாவில், ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, பகவதி கோயில்களைக் காணலாம். பிரபலமான பகவதி ஆலயங்கள் சில வருமாறு;
1. கொடுங்கல்லூர் பகவதி கோயில் – செங்குட்டுவன் அமைத்த முதலாவது
கண்ணகி கோயிலாகக் கருதப்படுகின்றது.
2. ஆற்றுக்கால் பகவதி கோயில் – இந்த பகவதியும் கண்ணகியின் வடிவாகவே
கருதப்படுகின்றார்.
3. சோட்டானிக்கரை பகவதி கோயில்.
4. செட்டிகுளங்கரை பகவதி கோயில்.

22. சண்டிதேவி
மகிமை நிறைந்த அவளை கிராமப்புற எளிய மக்கள் “மகமாயி’’ என்று அழைக்கின்றனர். எல்லா தாவரங்களையும் காப்பதால், சாகம்பரி என்றும் பெயர். நவராத்திரியில் துர்க்கையின் பேராற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக, மகாசண்டி ஹோமம் விசேஷமாக நடத்துவார்கள். துர்கையின் அம்சமாகத் திகழும் சண்டிதேவி, உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் காத்து அழிக்கும் சர்வ வல்லமை வாய்ந்த சக்தியாக விளங்குகிறாள். உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டிதேவியைக் குறித்து செய்யப்படும் இந்த ஹோமம், துன்பங்களை நீக்கி நம்மை பாதுகாக்கும் ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழவிடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது. பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மைவிட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் மகாசண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

23. திருமகளுக்கு விழா

நவராத்திரியின் அடுத்த மூன்று நாட்கள், திருமகளுக்கு உரியது. மகாலட்சுமியை அலைமகள் என்று அழைக்கிறோம். குபேரனுடன் தொடர்பு கொண்ட எட்டு செல்வக் கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மகாலட்சுமி. இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது. லட்சுமிகள் எட்டு, அதனையே ‘அஷ்ட லட்சுமிகள்’ என்று அழைக்கின்றோம். செல்வம், ஞானம், உணவு, மனவுறுதி, புகழ், வீரம், நல்ல புதல்வர்கள், விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வரியங்களாகும். பாற்கடலில் அவதரித்த தேவி மஹாலட்சுமி. பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு பொருட்கள் தோன்றின. அவைகளில்பலவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த பாற்கடலில் இருந்து மகாலட்சுமியும் அவதரித்தாள். அவள் உதித்த நாள் பங்குனி உத்திரத் திருநாள். நவராத்திரியின் இரண்டாம் மூன்று நாட்கள் செய்யும் பூஜைகள் அஷ்டலட்சுமியின் அருளைக் குறித்துச் செய்யப்படுகின்றது. வீரத்தையும், வெற்றியையும் விரும்பிய நமக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளித் தருபவள் அல்லவா மகாலட்சுமி!

24. மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்

பண்டிகையின் மகிழ்ச்சி என்பது குணங்களின் மகத்துவங்களைச் செழுமையாக்குவது. ஒவ்வொரு பண்டிகையின் முடிவிலும் நம்முடைய ஆத்மார்த்தமான குணம் அதிகரித்து இருக்க வேண்டும். அதுதான் பக்தியின் விசேஷம். மகாலட்சுமியின் திருவருள் பெற வேண்டும் என்றால், நல்ல குணங்களும் பரோபகார சிந்தனையும் மனதில் அழுத்தமாக இருக்க வேண்டும். இனிமையான பேச்சும், சாந்தமும், பணிவும், கிடைத்ததை பகிர்ந்து கொள்ளும் குணமும், பிறரை மதிக்கும் பண்பும், மனம் மொழி மெய்களில் தூய்மையும் யாரிடத்தில் உண்டோ, அவர்களிடத்தில் அன்னை மஹாலட்சுமி வசிப்பாள். இந்த நற்குணங்கள் நவராத்திரி பூஜையின் போது ஓங்க வேண்டும். நற்குணங்கள் நிலைத்திருக்க பிரார்த்திக்க வேண்டும். “எண்ணம் போல் தானே வாழ்வு’’ என்பதை மறக்கக்கூடாது.

25. பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள்

இந்த நவராத்திரியில் ஸ்ரீ சூக்தம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம் என துதிப்பாடல்களை பாடியும், தியானித்து அன்னை மகாலட்சுமியை வணங்கி வழிபடலாம். தேவியின் துதிப்பாடல்களுள் ஆதிசங்கரர் பாடிய கனகதாரா தோத்திரமும், பராசரப்பட்டர் இயற்றிய ஸ்ரீ குணரத்ன கோசமும் மகிமை பெற்றவை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை. ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித்துதித்தார். அவர் பாடிய ஸ்லோகம் இது;

“விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:’’
‘‘உன் பார்வை விளையாட்டாய்கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான். நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒரு நொடி என் மீது பட்டாலும், உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!’’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

26. பெருமாள் கோயில்களில் நவராத்திரி

திருப்பதியில் நவராத்திரியை ஒட்டி நடக்கும் பிரம்மோற்சவத்திற்கு, நவராத்திரி பிரம்மோற்சவம் என்றே பெயர். அதில் ஒருநாள் மஹாலட்சுமி உருவம் தாங்கி (நாச்சியார் கோலத்தில் (8.10.2024 காலை) வீதி வலம் வருவார். வைணவத்தில் மகாலட்சுமிக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த இடம் பகவானிடத்திலும், பாகவதர்களிடத்திலும் உண்டு. ஒரு கையால் நாராயணனையும், ஒரு கையால் அவன் அடியார்களையும் பிடித்துக் கொள்பவள் மகாலட்சுமி. “புருஷகார பூதை” என்றும் “தகவுரைச்செல்வி” என்றும் கூறுவார்கள். இறைவனின் அருளை பெற்றுத்தருபவள் மகாலட்சுமித் தாயார். பகவானின் வலது மார்பில் அமர்ந்தவள். பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவள். எனவேதான், எல்லா பெருமாள் கோயில்களின் வலப்புறத்திலும் மகாலட்சுமியினுடைய சந்நதி இருக்கும். அவளை தேவி என்றோ, அம்பாள் என்றோ அழைக்கும் வழக்கம் இல்லை. தாயார் என்று (தாயாரைச் சேவித்தீர்களா? தாயார் சந்நதிக்கு சென்றீர்களா?) என்று அழைப்பார்கள். இந்த நவராத்திரி உற்சவம் பெரும்பாலும் எல்லா பெருமாள் கோயில்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் தாயாருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து, பிரகார வலம் வந்து ஊஞ்சல் நிகழ்ச்சி நடத்துவார்கள்.

27. ஆயுத பூஜை

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், கலைமகளுக்கு உரியது. அம்பிகை வித்யா ரூபிணியாக சகல கலைகளையும் அளிக்கின்றார். எனவே, நவராத்திரியில் அவளை கலைமகளாகக் கருதி பூஜிப்பது சிறப்பு. இதில்தான் ஆயுத பூஜை என்னும் சரஸ்வதி பூஜை (மகாநவமி தினம்) வருகிறது. நவராத்திரி பூஜையிலேயே விசேஷமாக எல்லோரும் கொண்டாடும் பூஜை இது. தொழிலாளர்கள், சிறு கடை வைத்திருப்பவர்கள், பெரிய நிறுவனம் நடத்துபவர்கள் என தொழில், வணிகம் இரண்டிலும் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் சரஸ்வதி பூஜை என்னும் ஆயுத பூஜை குதூகலமான விழா. புரட்டாசி மாதத்தில் வருகின்ற நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்ற பெயர். சரத் காலத்தில் நிகழ்வது (அக்டோபர்) என்பதால் சாரதா நவராத்திரி. சாரதா என்ற திருநாமம் விசேஷமாக கலைமகளுக்கு உரியது. காஞ்சிக்கு தட்சிண காஷ்மீரம் என்று ஒரு பெயர் உண்டு. காரணம், கலைமகள் அருளான வித்யாபலம், காஞ்சியில் பூரணமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்று காஞ்சி மாநகரத்தை புகழ்ந்து பாடிய இங்கு காமாட்சி அன்னையே சரஸ்வதி தேவியாக (வாக் தேவியாக) விளங்குகிறாள் என்ற ஐதீகம் உண்டு. காமாட்சி ஆலயத்தில் எட்டு திருக்கரங்களுடன் சரஸ்வதிதேவி காட்சி தருகின்றாள்.

28. கலைமகளின் அடையாளங்கள்

பொதுவாகவே, அக்காலத்தில் கல்வி
என்பது உலகியல் கல்வியைக் குறிக்கவில்லை. மெய்யறிவு (ஞானம்) பெறுவதுதான் கல்வியின் பயனாக இருந்தது. ஞானாம்பிகை, வித்யாம்பிகை என்றெல்லாம் கலைமகளுக்கு திருநாமங்கள் உண்டு. அகங்காரத்தை அடித்து நொறுக்கி, அற்புத ஞானம் தருபவள் சரஸ்வதி தேவி. தூய்மையான வெள்ளை ஆடை, ஸ்படிக மாலை, ஏட்டுச் சுவடி, கையில் வீணை இவை எல்லாம் கலைமகளின் அடையாளங்கள். ஒருவருடைய வீட்டில் சில புத்தகங்கள் அடங்கிய நூல் நிலையமோ இசைக் கருவிகளோ இருந்தால், அங்கே கலைமகளின் சாந்நித்தியம் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம். சரஸ்வதியிலும் அஷ்ட சரஸ்வதி உண்டு. அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

29. நவராத்திரி கொலு

நவராத்திரியில் கொலு என்பது விசேஷம். பல்வேறு விதமான பொம்மைகளை படிகளில் அடுக்குவார்கள். இந்த படிகள் கீழிருந்து மேலே ஒவ்வொன்றும் உயரமாகப் போய்க் கொண்டே இருக்கும். கீழ்ப்படியில் சாதாரண மனித உருபொம்மைகளை அல்லது விலங்குகளை அல்லது தாவரங்களை வைப்பவர்கள், மேல்படியில் பராசக்தியை அல்லது இஷ்ட தேவதையை வைத்து நிறைவு செய்வார்கள். ஒவ்வொரு மனிதனும் படிப்படியாக உயர வேண்டும், வான் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் அந்த நிலையை அடைந்து தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்பதுதான் நவராத்திரி கொலுப்படிகள் நோக்கம். நவராத்திரியில் கன்னி பூஜை என்பது விசேஷமானது. முதல் நாள் இரண்டு வயது சிறுமியை
அம்பிகையாக பாவித்து வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயதுகூட உள்ள
சிறுமியை அம்பாளாக பாவித்து வணங்குகின்ற கன்னி பூஜை சிறப்பானது.
முதல் நாள் (2 வயதுக் குழந்தை) – குமாரி.
இரண்டாம் நாள் (3 வயதுக் குழந்தை) – திரிமூர்த்தி.
மூன்றாம் நாள் (4 வயதுக் குழந்தை) – கல்யாணி.
நான்காம் நாள் (5 வயதுக் குழந்தை) – ரோகிணி.
ஐந்தாம் நாள் (6 வயதுக் குழந்தை) – காளிகா.
ஆறாம் நாள் (7 வயதுக் குழந்தை) – சண்டிகா.
ஏழாம் நாள் (8 வயதுக் குழந்தை) – சாம்பவி.
எட்டாம் நாள் (9 வயதுக் குழந்தை) – துர்கா.
ஒன்பதாம் நாள் (10 வயதுக் குழந்தை) – சுபத்ரா.

30. முடிவுரை
அது மட்டும் இல்லை, இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து பூஜை செய்வார்கள். மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபடுவார்கள். இந்த ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் குறைந்தபட்சம் அஷ்டமி, நவமி, தசமி முதலிய நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும். நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூக்கள் கொடுக்க தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும். நவராத்திரி பூஜையின் போது, அக மகிழ்ச்சியும், புற மகிழ்ச்சியும் ஒருங்கே வளர்கிறது. நாம் பிறர் வீட்டுக்கு போவதாலும், பிறர் நம் வீட்டுக்கு வருவதாலும் உறவுகள் வளர்கின்றன. அதனால், மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறுகிறது.

எஸ். கோகுலாச்சாரி

The post நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி appeared first on Dinakaran.

Related Stories: