இபிஎஸ்சை கண்டித்து அதிமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு போராட்டம்

சின்னமனூர்: எடப்பாடியை கண்டித்து அதிமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதிமுக ஆட்சியில் ஒரு சமூகத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, சீர்மரபினர் உள்ளிட்ட 68 சமுதாயத்திற்கு, துரோகம் செய்ததாக, எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்று நடந்த அதிமுக மாநில மாநாட்டிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியில் மதுரை மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமத்தில் அதிமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு சீர்மரபினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில், ‘‘இந்த போராட்டம் ஆரம்பம்தான். இனி தமிழகம் முழுவதும் அதிமுக கொடிகள் இறக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

The post இபிஎஸ்சை கண்டித்து அதிமுக கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: