கருப்பணசாமி கோயில் திருவிழா; 3 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு கமகம கறி விருந்து: ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழாவில் 3 ஆயிரம் ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிபட்டியில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியன்று திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவையொட்டி கடந்த 15 நாட்களாக பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர்.

நேற்று நடந்த திருவிழாவில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 3 ஆயிரம் ஆடுகள் கருப்பணசாமி பலியிடப்பட்டன. பின் விடிய விடிய இறைச்சி சமைக்கப்பட்டது. கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, இன்று அதிகாலை கறி விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைச்சியை சுவைத்தனர். திருவிழாவையொட்டி வத்தலக்குண்டுவில் இருந்து விராலிபட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்போம். மற்ற ஊர்களில் சாதத்துடன் இறைச்சி பரிமாறப்படும். ஆனால், இந்த கருப்பணசாமி கோயில் திருவிழாவில் இறைச்சி மட்டுமே பிரசாதமாக பரிமாறப்படும். மீதமிருக்கும் இறைச்சியை வீட்டிற்கு கொண்டு செல்ல மாட்டோம். இப்பகுதியில் குழி தோண்டி புதைத்து விடுவோம்’ என்றனர்.

The post கருப்பணசாமி கோயில் திருவிழா; 3 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு கமகம கறி விருந்து: ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: