பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு ஐடிஐயில் நமது சகோதரிகள் நிகழ்ச்சி: அரியலூர் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

அரியலூர், ஆக. 18: பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் கலந்துகொண்ட நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசுகையில், 4.0 திட்டத்தின் கீழ் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்த அதி நவீன தொழில்நுட்ப மையம் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன தொழில்நுட்ப மையத்தில் மேனுஃபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் டெக்னீசியன் ஆகிய ஒரு வருட தொழிற் பிரிவுகளும், அட்வான்ஸ் சி.என்.சி மெஷினிங் டெக்னீசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் ஆகிய இரு வருட தொழிற்பிரிவுகளும், ஐஓடி, பிராசஸ் கண்ட்ரோல், ப்ராடக்ட் டிசைன், ஆட்டோ எலக்ட்ரிக் மெயின்டனன்ஸ், அட்வான்ஸ்டு பெயிண்டிங் போன்ற 23 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

மேலும், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைத்து நிறுவப்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்ப மையம் இயந்திரங்கள், தளவாடங்கள் என மொத்தம் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு தரம் உயர்வு செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சிகளையும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவிகள் பார்வையிட்டு கற்கும் வகையிலும் மற்றும் வரும் ஆண்டுகளில் உயர்கல்விக்கு ஏற்ற படிப்பு குறித்து அறிந்துகொள்ளும் வகையிலும் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள படிப்புகள் மற்றும் 4.0 திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” நிகழ்ச்சி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற நவீன தொழிற்பயிற்சிகளை இதன் மூலம் மாணவிகள் உரிய முறையில் கற்று ஈடுபடுத்திக் கொள்ள முன்வருவதுடன் இதுபோன்ற நவீன தொழிற்பயிற்சிகள் குறித்து பிற நபர்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன், தாசில்தார் கண்ணன், வாலாஜநகரம் ஊராட்சி தலைவர் அபிநயா, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு ஐடிஐயில் நமது சகோதரிகள் நிகழ்ச்சி: அரியலூர் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: