அலங்காநல்லூர், ஆக. 17: அலங்காநல்லூர் அருகே வீரர்களுக்கான பரிசோதனை மையம், மக்களுக்கான காலரி, காளைகளுக்கான ஓய்விடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்தும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு என்றால் முதலில் நினைவிற்கு வருவது மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர். இங்கு பல்லாண்டுகளுகாக ஜல்லிகட்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கிபட்டி கீழக்கரை பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த பிரமாண்ட மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு மைதானம் அமையவிருக்கும் பகுதியினை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர். இதன் முடிவில், இப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 65 ஏக்கர் இடம் கண்டறியப்பட்டது. இங்கு ரூ.44 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பது என முடிவானது. இதையடுத்து ஜல்லிகட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வபருகிறது. இந்த பணிகளை 5வது முறையாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரை பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர்கள் கூறியதாவது: இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பது அவரது விருப்பம். அதன்படி கட்டுமான பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது 65 சதவீத பணிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காளைகளுக்கு கயிறு எந்த அளவு முக்கியமோ, அதேபோல் புதிய திட்டங்களில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் அரசுக்கு மிகவும் முக்கியம். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் ஜல்லிகட்டு மைதானம் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன. பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் எந்தெந்த பகுதிகளில் நடைபெறுகிறதோ அவை அதே இடங்களில் ஆண்டுதோறும் நடப்பதில் எந்த தடையும் ஏற்படாது. அலங்காநல்லூர், பாலமேடு, ஆகிய இடங்களில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு மைதானங்கள் உள்ளன. வழக்கமான தேதிகளில் அந்தந்த இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். தற்போது இந்த இடத்தில் அமையும் ஜல்லிக்கட்டு அரங்கம் என்பது பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை அழியாமல் பாதுகாப்பாக மக்கள் பார்ப்பதற்கான இடமாக உருவாகிறது.
இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்தப்படும். அரசு சார்பில் பல்வேறு கலை பண்பாடு சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுவதற்கு இந்த மைதானம் உதவியாக அமையும். கீழடி அகழாய்வு மையம், கலைஞர் நூலகம், சென்னையில் உள்ள கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை ஆகியவை எப்படி மக்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதோ அதேபோல் அலங்காநல்லூர் அருகே அமையக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு மைதானம் தொன்மை வாய்ந்த, பழம்பெருமை மிக்க நிகழ்வுகளை நடத்தக்கூடிய இடமாக திகழும் என்பது நிச்சயம். இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.
The post அலங்காநல்லூர் அருகே பல்வேறு வசதிகளுடன் ரூ44 கோடியில் உருவாகும் ஜல்லிக்கட்டு மைதானம் appeared first on Dinakaran.
