* பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா பங்கேற்பு
* ராகுல், கார்கே அதிரடி வியூகம்
புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா தலைமையில் பாஜவும், மக்களவை தேர்தலை சந்திப்பது தொடர்பாக மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் தலைமையில் காங்கிரசும் ஒரே நாளில் போட்டி போட்டு ஆலோசனை நடத்தின. இதன் மூலம் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியை வீழ்த்த, காங்கிரஸ் உட்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. அதே சமயம், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜவும், மக்களவை தேர்தல் குறித்து காங்கிரசும் நேற்று ஒரே நாளில் ஆலோசனை நடத்தின. டெல்லியில் பிரதமர் மோடி,பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடப்பதால் 5 மாநில தேர்தலுக்கு பாஜ மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பொதுவாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே பாஜ மத்திய தேர்தல் குழு கூடி விவாதிக்கும். ஆனால் இவ்வளவு முன்கூட்டியே தற்போது ஆலோசனையை தொடங்கி உள்ளது.
மேலும் தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் மட்டுமே பாஜ ஆட்சி செய்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும், தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் ஆட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியும் நடக்கிறது. எனவே மக்களவை தேர்தலுக்கு முன்பாக தனது பலத்தை காட்ட, எஞ்சிய 4 மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க பாஜ திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நேற்றைய கூட்டத்தில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானும் சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், எதன் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் அடிப்படையில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மற்ற 3 மாநிலங்களுக்கான தேர்தல் குழு கூட்டமும் விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று காலை டெல்லி மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு மாநிலம் வாரியாக தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி அனில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. காங்கிரஸ் 2ம் இடமே பிடித்தது. இதனால் இம்முறை மக்கள் காங்கிரசிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பதாக ராகுல் தெரிவித்தார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், 7 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தல் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல மாலையில் ஜார்க்கண்ட் மாநில மக்களவை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது.
டெல்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியா?
டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அல்கா லம்பா, ‘‘டெல்லியில் 7 மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கார், ‘‘டெல்லி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் இந்தியா கூட்டணிக்கு அர்த்தமே இருக்காது’’ என்றார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பபாரியா அளித்த பேட்டியில், ‘‘அல்கா லம்பா சொன்னதில் உண்மை இல்லை. அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்றாலும், இதுபோன்ற முக்கியமான பிரச்னைகளில் பேச அவருக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இன்றைய கூட்டத்தில் எத்தனை தொகுதியில் போட்டி என்பது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. தேர்தலுக்கு தயாராவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது’’ என கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
The post 5 மாநில சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாஜ., காங்கிரஸ் போட்டிபோட்டு ஆலோசனை appeared first on Dinakaran.
