படைப்பாற்றலைப் பெருக்கும் பசுபதீஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கரூர்

ஓர் மாபெரும் பிரளயத்திற்குப் பிறகு பிரபஞ்சம் மீண்டும் உருவாக வேண்டியிருந்தது. பிரம்மா தன் படைப்புத் தொழிலை தொடங்க ஆயத்தமானார். ஒவ்வொரு விஷயத்தையும் விதையாய், கருவாய் பொதித்து பிரித்து வைத்திருந்தார். உலகத்தின் முதல் விஷயம், இறுதி விஷயம் என்று கணக்கிட்டிருந்தார். அதைக் கொண்டு தன் முதல் கருவாய் வைத்து ஓர் ஊரை அமைத்தார். முதல் கருவாய் இருந்ததால் அந்த ஊர் கருவூர் எனப்பட்டது. அது திரிந்து கரூராகியது.

ஆதியில் முதலில் தோன்றியதால் ஆதிபுரம் என்றும் அழைக்கப்பட்டது. இத்தலம் காலத்திற்குக் கட்டுப்படாத தொன்மை என்பதால், இக்கோயில் பல்வேறு மன்னர்களால் ஒவ்வொரு பகுதியாகக் கட்டப்பட்டதாக இருக்கிறது. சேரர்களின் தலைநகராக வஞ்சி மாநகரம் எனும் பெயரில் சிறந்து விளங் கியது. இவ்வூரின் தொன்மைக்குச் சாட்சியாக, இவ்வூர் வளர்ச்சியின் கருவாக அமைந்ததுதான் ஆனிலையப்பர் எனும் பசுபதீஸ்வரர் கோயிலாகும்.

சோழர்களின் கட்டடக்கலையும், பாண்டியர்களின் பாணியும் கலந்து செய்த ஓர் அற்புதக் கலைப்பெட்டகமாக இக்கோயில் விளங்குகிறது. உள் உறையும் ஈசன் அதையும் தாண்டிய அருட்பெட்டகமாக பிரகாசிக்கிறார். இத்தல ஈசன் சுயம்புக் கருவாய் ஓர் புற்றில் நிலைகொண்டிருந்தார். காமதேனு பூசிக்கும்போது தன் கால் இடறி புற்று ஒடிந்தது. நாற்புறமும் பிளந்தது. சட்டென்று ஈசன் பசுபதிநாதராய் காமதேனுவை தடுத்தாட்கொண்டார். காமதேனுவின் குளம்பு இன்னும் குழிவாய், சிவலிங்கத்தின் மீது தழும்பாய் இருக்கிறது.

பிரளய காலத்தில் எல்லா ஆன்மாக்களும் இத்தலத்து ஈசனிடம் நிலைகொள்வதால் ஆனிலையப்பர் என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் வழிபாட்டை பங்குனியில் ஏற்றுக் கொள்ளும் பொருட்டு சூரியனுக்காக சற்று சாய்ந்து அந்த பூஜையை ஏற்றுக் கொண்டார். அம்பாள் தனி சந்நதியில் அலங்காரவல்லி எனும் கிருபாநாயகி நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். திருவடியின் கீழ் ஸ்ரீசக்ர பீடம் பிரதிஷ்டையாகியுள்ளது. அம்பாளின் திருவடி சந்திரமண்டலத்திற்கு நிகராய் சாத்திரங்கள் பகர்கின்றன.

சக்ரமும், சந்திரனிலிருந்து வழியும் அமிர்த தாரகைகளோடு நிமிர்ந்து நிற்கும் அம்பாள் குளுமையாய், கண்களில் அருளை அமிர்தமாய்ப் பொழிகிறாள். அம்பாளின் அருள்விழி கூர்மையாய் நம் உள்வரை பாய்கிறது. அப்படிப் பாய்ந்தது நம் வாழ்வை பிரகாசிக்க வைக்கிறது. சிறிது நேரம் நின்று பாருங்கள். உங்கள் நிலை உயர்வதைப் பார்ப்பீர்கள்.

இத்தலத்தின் இன்னொரு சிறப்பு ஈசன் தன் பக்தைக்கு தன்னையே கொடுத்து, தனிச் சந்நதியில் வைத்து அழகு பார்க்கும் அற்புதக் கோயில் இது. அவள் ஒரு வேடுவனின் மகள். பெயர் சௌந்தரநாயகி. அழகு வடியும் முகம் உடையாள். அதுபோலவே சுந்தரமாக விளங்கும் ஈசனிடம் மனம் கொடுத்தாள். மணந்தால் ஈசன் என்று ஒரே பிடியில் நின்றாள். ஊராரும் கோயிலில் உள்ள ஈசன் உனை மணப்பதா என்று கேலியாய்ப் பேச, நீங்கள் என்னோடு வாருங்கள். அவர் மணப்பதைப் பாருங்கள் என்று திரளாய் அழைத்துப் போனாள்.

பங்குனி உத்திரத்தன்று ஊர் முழுவதும் மலர்கள் சொரிந்து, வண்ணமயமாய் ஒளிர்ந்தது. ஈசன் தெய்வீக மாலை ஒன்றை அணிவித்து தன் இடம் சேர்த்துக்கொண்டார். ஊரார் திகைத்துப் போனார்கள். சௌந்தரநாயகியை தனிசந்நதியில் அமர்வித்தார்கள். இருகைகூப்பி அவளை வணங்கினார்கள். இன்றும் சிறப்பான விழாவாக அது கொண்டாடப்படுகிறது. திருமணம் நடக்க வேண்டும் என்று இங்குள்ள சௌந்தரநாயகியிடம் பிரார்த்தனையாகச் சொன்னால் போதும். சட்டென்று நடத்தி வைத்துவிடுகிறாள்.

அதனாலேயே அதிக அளவில் இங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.வெளிப்பிரகாரத்தை மெல்ல வலம் வரும்போது சோழர்களின் ராஜகுருவான கருவூர்த்தேவர் எனும் சித்தரின் சமாதி, நம் சிந்தனையை நிறுத்துகிறது. நெஞ்சுக்குள் நிம்மதி பரப்புகிறது. மெல்ல எழுந்து நகர்ந்தால் மனம் வானமாய் மாறிவிட்டிருப்பது புரிகிறது.

ராஜகோபுரம் தாண்டிய சிறிய கோபுரத் திற்கடியில் புடைத்து நிற்கும் விநாயகர் சிற்பம் அழகானது. யானை மீதேறி கையில் பரசும், மழுவும் ஏந்தி போருக்குச் செல்லும் எறிபத்தரின் உருவச்சிலை உள்ளம் நெகிழ்த்தும். காமதேனு தன் நாவால் சிவலிங்கத்தை வருடி பால் சொரியும் காட்சி நம்மை பரவசப்படுத்தும்.

புகழ்ச்சோழர் கண்கலங்கி ஓர் சிவபக்தனை கொன்றோமே என்று வீரனின் தலையை கைகளோடு இணைக்கப் பதறிய சிற்பத்தை உற்றுப்பார்த்தால் நம் கண்கள் கலங்கும். அதற்குப் பிறகு அவர் புகழ்ச்சோழ நாயனாராக மலர்ந்தார் என்பது பெரிய புராணம். இவையெல்லாமும் இத்தலத்தில் நடந்த அற்புதங்கள். கரூர் செல்லுங்கள். கருவூர் நாதன் பசுபதீஸ்வரரைப் பற்றிடுங்கள். அவன் அருளைப் பருகிடுங்கள்.

தொகுப்பு: கண்ணன்

The post படைப்பாற்றலைப் பெருக்கும் பசுபதீஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: