உறியடி உற்சவம் – தெய்வீக உற்சாகம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வரகூர்

ஆவணித் திங்களில், மாயக் கண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அவனது சின்னச் சின்னப் பாதங்களை, நமது இல்லங்களில் கோலமாக வரைந்து, அந்தப் பரம்பொருளை வரவேற்கத் தயாராகிறோம். இனிமையானவை அனைத்தும் ஒன்று திரண்டதாக அமைந்ததே கண்ணனின் அவதாரம். அவனது தோற்றம் முதல் ருக்மிணியைத் திருமணம் செய்து கொண்டது வரை நிகழ்த்திய லீலா விநோதங்களை இசை வடிவில் நாடகமாக நமக்கு அளித்தவர் நாராயண தீர்த்தர். பாகவத புராணத்தையே அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ராகங் களில் பக்தி பூர்வமாக பல்சுவையுடன் 12 காண்டங்களில் அமைந்த அவரது ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ என்ற இசை நாடகம், ஜயதேவரின் கீத கோவிந்தத்திற்கு நிகராகக் கொண்டாடப்படுகிறது.

‘தரங்கம்’ என்றால் அலை. ‘தரங்கிணி’ என்றால் நதி என்று பொருள். ‘கோபாலன் என்ற கார்மேகத்திலிருந்து கருணை மழை, கிருஷ்ண லீலைகள் எனப்படும் அலைகளுடன் ஒரு ஆறாகத் தோன்றி கண்ணனின் அடியார்கள் என்ற வயல்களில் பாய்ந்து, உலகைத் தூய்மையாக்கட்டும்’ என்கிறார் நாராயண தீர்த்தர். அந்த மகானின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு திருப்பமே, நமக்கு அந்த அரிய இசைப் பொக்கிஷமான கிருஷ்ண லீலா தரங்கிணியைப் பெற்றுத் தந்துள்ளது. அந்தத் திருப்பம் தான் என்ன?

ஆந்திர மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் 1675ம் ஆண்டில், நீலகண்ட சாஸ்திரி – பார்வதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் கோவிந்தன். சாஸ்திரங்கள், வேதங்கள், பாகவதம், இசை, பரதநாட்டியம் என்று நளின கலைகளை இளமையிலேயே பயின்று நிகரற்று விளங்கினார். சிறிது கால மண வாழ்க்கைக்குப் பின்னர் துறவறம் மேற்கொண்டார். வாரணாசி சென்று சிவராம தீர்த்தர் என்ற மகானிடம் தீட்சை பெற்று, ‘நாராயண தீர்த்தர்’ என்று அழைக்கப்படலானார். அதன்பின்னர், குருவின் ஆணையை ஏற்று, தென்னகத்திற்கு தீர்த்த யாத்திரை புறப்பட்டு வேங்கடம் வந்தடைந்தார். அப்போதுதான் அந்தத் திருப்பம் ஏற்பட்டது. அதற்கு வித்திட்டவன் அந்த வைகுந்த வாசனே!

தீர்த்தரின் அடிவயிற்றில் இனம் புரியாத வலி ஏற்பட்டது. அது மெல்ல மெல்லக் கடுமையாகியது. துடித்தார் தீர்த்தர். இருப்பினும் தனது பயணத்தைத் தொடர்ந்து, தஞ்சைத் தரணி வந்து சேர்ந்தார். அருகிலுள்ள திருத்தலத்திற்கு செல்லுமாறு அசரீரி பணித்தது. நடுக்காவேரி என்ற தலத்தில் அவர் தங்கினார். இருட்டிவிட்டது. அங்கிருந்த விநாயகர் கோயிலில் ஒதுங்கி விட்டு, விடிந்ததும் பயணத்தைத் தொடர விரும்பினார். வயிற்று வலியும், வேதனையும் சற்றும் குறையவில்லை. ‘திருவேங்கடத்தானின் திருவடியே சரணம்’ எனப் போற்றிக் கண்ணயர்ந்தார் அவர். அப்போது வேங்கடநாதனே அவரது கனவில் தோன்றி, மறுநாள் விடிந்ததும் தீர்த்தர் கண்விழித்துப் பார்க்கும் போது முதலில் காணும் விலங்கினைத் தொடர்ந்து செல்லுமாறு பணித்தார்.

காலையில் நாராயண தீர்த்தர் கண் விழித்த போது அவர் முதலில் காண்பதற்காகவே காத்திருந்தது போல, ஒரு வெள்ளைப் பன்றி அங்கே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. திருமலைவாசன் கட்டளை நினைவுக்கு வர, நாராயண தீர்த்தர் அந்த ‘சுவேத வராகத்தை’த் தொடர்ந்து சென்றார். பூபதி ராஜபுரம் என்ற ஊரை அடைந்ததும், அங்கிருந்த பெருமாள் கோயிலினுள்ளே புகுந்த அந்த வெள்ளைப் பன்றி மாயமாக மறைந்து விட்டது. திகைத்தார், தீர்த்தர். அன்று வரை அவரை வாட்டிவந்த வயிற்று வலியும் அந்தக் கணமே மறைந்துவிட்டது. அந்தத் தலத்தில் குடிகொண்டுள்ள வேங்கடேசப் பெருமாளின் அருளால் அவர் கவரப்பட்டார். அந்தப் பூபதி ராஜபுரமே இப்போது வரகூர் என அழைக்கப்படுகிறது.

வரகூர் கிராமத்திலேயே தங்கி, இறைவன் துதியையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டார் தீர்த்தர். ‘நாமாவளி’ என கண்ணனைப் போற்றிப் பாடும் பஜனைகளை தினமும் நடத்தினார். கோகுலத்தில் சின்னக் கண்ணன் நடத்திய லீலைகளில் ஒன்றான ‘உறியடித் திருவிழாவை’ ஆண்டுதோறும் நடத்தத் தொடங்கினார். வரகூர் வேங்கடேசப் பெருமாளைக் கண்ணனாகவே பாவித்தார். ஒரு சமயம் அந்தப் பெருமாளே அவருக்கு ருக்மணி – சத்யபாமா சமேதராகக் காட்சி தந்ததோடு தனது லீலைகளைக் கீர்த்தனங்களாகப் பாடும்படி ஆணையிடவும் செய்தார்.

அதன் விளைவாக உருவான காவியம்தான் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’. அதனைப் பாடும்போது அதற்கு ஏற்ப வேங்கடேசப் பெருமாளே நடனமாடிய சலங்கை ஒலியைத் திரைக்குப் பின்னால் கேட்டார் நாராயண தீர்த்தர்.

அந்தக் காவியத்தை முடித்து மங்களம் பாடியதும் அந்தச் சலங்கை ஒலியும் நின்றுவிட்டது. நாராயண தீர்த்தரின் இதயத்திலிருந்து எழுந்த பக்தி உணர்வலைகளே ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ என்ற மாபெரும் காவியமாக உருவெடுத்தது என்றால் மிகையாகாது. இன்றைக்கும், திருவையாறிலிருந்து மேற்கே 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வரகூர் கிராமத்தில், ஆண்டுதோறும் ‘உறியடித் திருவிழா’ மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தனது தோழர்களோடு கண்ணன் கோபியர்களின் இல்லங்களுக்குச் சென்று வெண்ணெயைத் திருடி உண்ட லீலா விநோதத்தை நினைவூட்டுவதே இந்தத் திருவிழா.

நாராயண தீர்த்தர் வாழ்ந்திருந்த காலத்திலேயே அந்த வரகூர் கிராமத்தையே கோகுலம் ஆகவும், வேங்கடேசப் பெருமாளையே பாலகிருஷ்ணனாகவும் கண்டுகளித்தார். வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் போன்ற விநோதங்களை அபிநயத்துக் காட்டி ருக்மிணி கல்யாணம் வரை உற்சவங்களை முறையாக நடத்தி வந்தார். பதினோரு நாட்கள் நடைபெறும் இந்த உறியடித் திருவிழாவில், காலையில் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள், வேத பாராயணத்தோடு தொடங்கும்.

இரவில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். இரவு ஏழு மணிக்குத் துவங்கும் ‘திவ்ய நாம சங்கீர்த்தனம்’ நள்ளிரவு வரை நீடிக்கும். இரவில் திருவீதி உலா வரும் பெருமாளுக்குப் பின்னால், நூற்றுக் கணக்கான பக்தர்கள் ‘அங்கப் பிரதட்சணம்’ செய்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்வதைக் காணும்போது நெஞ்சம் பக்தியால் நெகிழும். அது மட்டுமல்ல, இடுப்பிற்குக் கீழே அங்கஹீனம் ஆனவர்கள், உதவியாளர்களுடன் மூன்று முறை வீதிகளை உலாவருவதும் காலம் காலமாக நடைபெறுவதாகும். அப்படிச் செய்வதன் மூலம் பலர் தங்கள் ஊனம் நீங்கப்பெற்று நலம் பெற்றுள்ளார்கள் என்பது கண் கூடு. குன்மம் மற்றும் தீராத வயிற்று வலியினால் அவதியுறு வோரும் ‘அங்கப்பிரதட்சணம்’ செய்வதைக் காணலாம்.

வரகூருக்கே பெருமை தரும் ‘உறியடித் திருவிழா’வில் ‘ராஜாங்க சேவை’ சிறப்பு அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாகும். அன்றுதான் உறியடி ஆரோகணமும் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த நாள் ஸ்ரீவேணுகோபால சேவை, அதற்கடுத்த நாள் ஸ்ரீகாளிங்க நர்த்தன சேவை. மறுநாள் உறியடிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் சேவை, தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீபார்த்தசாரதி சேவை, ஸ்ரீசயன ரங்கநாதப் பெருமாள் சேவை, ஸ்ரீயசோதா கிருஷ்ணர் சேவை என்று தெய்வீகக் கோலாகலமாக விழா வெகு சிறப்பாக நடந்தேறும். சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் வீதியுலா வந்து, தான் நேரடியாக பக்தனை வந்து சந்திக்கும் தெய்வீகப் பெருந்தன்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

உறியடி நாளில் காலையில், கருட மண்டபத்திலுள்ள வெண்ணெய்த் தாழி பல்லக்கில் பெருமாள் அமர்வதுடன் நிகழ்ச்சிகள் தொடங்கும். காலை சுமார் 11 மணிக்கு தங்கக் குடத்துடன் வெண்ணெய்த் தாழிப் பல்லக்கில் வீதியுலா நடைபெறும். பகல் 3 மணிக்கு தொடங்கும் இசை நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நீடிக்கும். இரவு 11 மணிக்கு ‘வழுக்கு மரம் ஏறி உறியடித் திருவிழா’ நடைபெறும். அடுத்த நாள் காலை 9 மணிக்கு ருக்மிணி கல்யாணம்.

மறுநாள் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ‘உறியடி அவரோகணமும்’ நடைபெறும்.சின்னக் கண்ணனின் லீலா விநோதங்களைக் கண்முன் நிறுத்தும் ‘வரகூர் உறியடித் திருவிழா’ வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் மட்டுமல்ல, புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் தெய்வீக அனுக்ரகமும் கூட!

தொகுப்பு: பிரபு சங்கர்

The post உறியடி உற்சவம் – தெய்வீக உற்சாகம்! appeared first on Dinakaran.

Related Stories: