ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் கவர்னருக்கும் நீட் மசோதாவுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை: கையெழுத்து போட மாட்டேன் என்று மக்களை ஏமாற்ற வேண்டாம் என அமைச்சர் பேட்டி

தென்காசி: ‘நீட் விலக்கு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதால் கவர்னருக்கும், நீட்டுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசியில் நேற்று அளித்த பேட்டி: நீட் தேர்வு விலக்கு 100 சதவீதம் பெற்றே தீருவது என்பது முதல்வரின் எண்ணம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம். நீட் விலக்கு மசோதா சட்டசபையில் 2வது முறையாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரும் வேறு வழியே இன்றி ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். அவர் அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

உள்துறை அமைச்சகம் ஆயுஷ், கல்வி, சுகாதாரத் துறை ஆகிய மூன்று துறைகளிடமும் விளக்கங்கள் கேட்கிறது. நாமும் சட்ட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று சரியான முறையில் விளக்கம் கொடுத்து வருகிறோம். எனவே நீட் விலக்கு பெறும் தீர்மானம் என்பது உயிரோட்டமாக உள்ளது. ஆளுநர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து கலந்தாலோசனை என்ற பெயரில் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று பேசி இருக்கிறார். எப்போது சட்டமன்றம் 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்ததோ அதனை வேறு வழியே இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததுடன் அவரது பணி முடிந்தது.

கவர்னரின் ஒப்புதல் என்பது இனி அவசியம் இல்லை. மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறு பேசி வருகிறார்.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் படி குடியரசுத் தலைவர் நீட் விலக்கு அளித்தால் அதனை ஆளுநருக்கு ஒரு தகவலாக மட்டுமே தெரிவிப்பார்களே ஒழிய ஆளுநர் அனுமதி அளிக்க கோர மாட்டார்கள்‌. கவர்னருக்கும் நீட்டுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை. அவரது பேச்சு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதாக உள்ளது. அந்த கூட்டத்தில் அம்மாசியப்பன் என்பவர் தனது மகள் நீட் தேர்வில் 808வது இடத்தை பிடித்த போதிலும் நீட்டுக்கு எதிராக பேசி இருக்கிறார். கவர்னர் இந்த விஷயத்தில் நுனி மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் கவர்னருக்கும் நீட் மசோதாவுக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை: கையெழுத்து போட மாட்டேன் என்று மக்களை ஏமாற்ற வேண்டாம் என அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: