7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி; 4வது முறையாக பட்டம் வெல்லுமா இந்தியா?.. பைனலில் மலேசியாவுடன் இன்று மோதல்

சென்னை: 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்தியா, 19வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில் முதல் 15 நிமிடம் கோல் எதுவும் விழவில்லை. 19வது நிமிடத்தில் ஆகாஷ்தீப்சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 23வது நிமிடத்தில் பெனால்டிக் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், 30வது நிமிடத்தில் மன்தீப்சிங், 39வது நிமிடத்தில் சுமித் கோல் அடித்தனர். தமிழக வீரர் கார்த்திக் செல்வம் தனது பங்கிற்கு 51வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனால் கடைசி வரை ஜப்பானால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று பைனலுக்கு தகுதிபெற்றது.

முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வென்றது. இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் பைனலில் இந்தியா-மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 5வதுமுறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்தியா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மலேசியா முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது. லீக் சுற்றில் மலேசியாவை 0-5 என வீழ்த்திய இந்தியா இன்றும் வெற்றிபெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தொடர் 8 கோல்கள் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். இந்த தொடரில் இந்தியா தோல்வியையே சந்திக்கவில்லை. ஜப்பானுடன் லீக் சுற்றில் டிரா செய்த நிலையில் அரையிறுதி உள்பட மற்ற 4 போட்டியிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியா-இந்தியா இதுவரை 123 போட்டியில் மோதி உள்ளன. இதில் 85ல் இந்தியா, 17ல் மலேசியா வென்றுள்ளன. 21 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2011க்கு பின் மோதிய 1 போட்டியில் இந்தியா 13ல் வென்றுள்ளது. முன்னதாக மாலை 6 மணிக்கு நடைபெறும் 3வது இடத்திற்கான போட்டியில் ஜப்பான்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இன்று பைனல் முடிந்த பின்னர் நடக்கும் பரிசளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாகூர், மாநில விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகின்றனர்.

The post 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி; 4வது முறையாக பட்டம் வெல்லுமா இந்தியா?.. பைனலில் மலேசியாவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: