மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோபப்படாத ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது டெல்லி மகளிர் ஆணையம் விமர்சனம்

புதுடெல்லி: மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோப்பப்படாத ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியை டெல்லி மகளிர் ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக 26 எதிர்க்கட்சிகள் கொண்ட இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 3 நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி உரையாற்றிவிட்டு வெளியேறும்போது, பாஜ எம்பிக்கள் பகுதியை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்மிருதி இரானி ஆவேசமாக பேசினார்.

இவரது பேச்சை விமர்சித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது வருமாறு: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மக்களவையில் மிகவும் கோபத்துடன் பேசினார். ஆனால், மக்களவையில் தனக்கு பின்வரிசையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் அமர்ந்திருந்த நிலையில், அந்த விவகாரத்தில் ஸ்மிருதி இரானியின் கோபம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, மணிப்பூரில் 2 பெண்கள் ஆடைகளின்றி இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தின் போதும் ஸ்மிருதி இரானி கோபப்படவில்லை.

பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொலை செய்த 11 குற்றவாளிகள் சுதந்திரதினத்தன்று விடுதலை செய்யப்பட்டபோதும் அவர் கோபப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளிவருவதும் அவரை கோபப்படுத்தவில்லை. ஒருவேளை, கோபப்பட வேண்டிய விஷயங்களுக்கு உரிய முன்னுரிமையளிக்க ஸ்மிருதி இரானிக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post மணிப்பூர் பெண்கள் மீதான தாக்குதலுக்கு கோபப்படாத ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது டெல்லி மகளிர் ஆணையம் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: