குடிநீர் வடிகால் வாரியம் தோண்டிய பள்ளங்கள் வடசேரி – கீரிப்பாறை சாலையில் பழுது பார்க்கும் பணி

நாகர்கோவில், ஆக.11: நாகர்கோவில் வடசேரி கீரிப்பாறை இடையே விபத்துகளை ஏற்படுத்தி வந்த குடிநீர் வடிகால் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு புத்தன்அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சாலையோரமாக குழாய்கள் பதிக்கப்பட்டன. இதனால் சாலைகள், பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. ஏராளமான விபத்துகளில் 10க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஒரு வழியாக பொதுமக்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர், குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள் சாலையை நெடுஞ்சாலைத்துறையிடம் கடந்த சில மாதங்கள் முன்பு ஒப்படைத்தனர்.

எனினும் புதியதாக சாலை போட்ட மறுநாளே துவரங்காடு உள்பட பல பகுதிகளில் சாலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பள்ளம் தோண்டினர். இந்நிலையில் குடிநீர் சோதனை ஓட்டம் கடந்த மாதம் ெதாடக்கத்தில் தொடங்கியதும், வடசேரி முதல் புத்தன்அணை வரை பல பகுதிகளில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பள்ளங்கள் தோண்டி குழாய்களை சரி செய்தனர். ஆனால், தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாமல் பெரும் பள்ளங்களுடன் போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால், மீண்டும் இருமாதமாக அசம்பு சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். விபத்துகளும் ஏற்பட்டன. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் சாலைகளை பழுதுபார்க்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் தடிக்காரன்கோணம் முதல் கீரிப்பாறை வரை உள்ள சாலையை சீரமைப்பதில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த சாலையிலும் பல பகுதிகளில் சாலை முற்றாக உருக்குலைந்து மிகவும் மோசமாக காணப்பட்டன. இதற்காக கீரிப்பாறை பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கர் சாலை பழுது பார்க்கப்படும் எனக் கூறியிருந்தார். இதன்படி, தற்போது வடசேரி முதல் கீரிப்பாறை வரை உள்ள சாலை பள்ளங்கள் \”கட்\” செய்யப்பட்டு, வெட்மிக்ஸ், ஜல்லி கற்கள் மற்றும் தார் கலவை மூலம் பழுது பார்க்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post குடிநீர் வடிகால் வாரியம் தோண்டிய பள்ளங்கள் வடசேரி – கீரிப்பாறை சாலையில் பழுது பார்க்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: