யூடியூப் சேனல் நடத்துவதில் மோதல் வாலிபரை காரில் கடத்திய கும்பல்: சினிமா பாணியில் ஒரு மணி நேரத்தில் சுற்றிவளைப்பு; 12 பேர் கைது; 70 செல்போன், 5 லேப்டாப் பறிமுதல்

தர்மபுரி: யூடியூப் சேனல் நடத்துவதில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை தாக்கி காரில் கும்பல் கடத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில், போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று வாலிபரை மீட்டு, 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 செல்போன், 6 பைக், 5 லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (31). யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது நண்பர் பழைய தர்மபுரி முத்துப்பட்டியை சேர்ந்த சின்னசாமி (38). இவரும் தம்பி ராமகிருஷ்ணனும் தனித்தனி யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர்.

மூவரும் நண்பர்கள். யூடியூப் சேனலை பொறுத்தவரை சப்ஸ்கிரைபர் மற்றும் லைக்ஸ்தான் முக்கியம். எவ்வளவு பேர் பின்தொடர்கிறார்கள், எவ்வளவு பேர் லைக்ஸ் போடுகிறார்களோ அதற்கேற்ப சேனலின் வளர்ச்சி இருக்கும். வருமானமும் இருக்கும். ஒரு சேனலுக்கு எப்போவும் போல் லைக்ஸ் வந்தால் பிரச்னை இல்லை. திடீரென லைக்ஸ்கள் அதிகரித்தால், அந்த சேனலை யூடியூப் நிர்வாகம் முடக்கி விளக்கம் கேட்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னசாமி யூடியூப் சேனலில் வீவர்ஸ் அதிகமாக காட்டி சேனல் லாக் செய்யும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த செயலுக்கு ஆனந்தகுமார் தான் காரணம் என்று நினைத்து, நேற்று முன்தினம் பகலில் அவருடைய தர்மபுரி அலுவலகத்துக்கு சின்னசாமி உள்ளிட்ட 12 பேர் சென்றனர். அப்போது ஆனந்தகுமாருக்கும், சின்னசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆனந்தகுமாரை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதோடு காரில் கடத்திச் சென்றனர். தகவலறிந்து தர்மபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஒரு படையும், டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படையும் கடத்தல்காரர்களை தேடினர். ஒரு பிரிவினர் கடத்தல் காரை சினிமா பாணியில் பின்தொடர்ந்து சென்று குண்டல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சுற்றிவளைத்தனர். காரில் இருந்தவர்களையும், பின்னால் டூவிலரில் வந்தவர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 70 செல்போன், 6 பைக், ஒரு கார், 5 லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் ஆனந்தகுமார் யூடியூப் சேனல் அலுவலகத்தில் பணியாற்றும் பிரேம்குமார் (18), தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதில், சின்னசாமி உள்ளிட்ட 12பேர் கும்பல் ஆனந்தகுமாரை தாக்கி கடத்தியதாகவும் 70 செல்போன், 5 லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், ஆனந்தகுமார், சின்னசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தியுள்ளனர். பின்னர் தனித்தனியாக பிரிந்து யூடியூப் சேனல் நடத்தியுள்ளனர்.

இதில் சின்னசாமி யூடியூப் சேனல் லாக் ஆகும் நிலைக்கு வந்தது. ஆனந்தகுமார்தான் இந்த செயல் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சின்னசாமி அடியாட்களுடன் சென்று பட்டப்பகலில் ஆனந்தகுமாரை தாக்கி காரில் கடத்தியுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து சின்னசாமி (38), சீராளன் (30), சுந்தரம் (30), ரவி (39), முருகன் (26), ராமு, சுரேஷ்(35), சதீஷ் (35), பெரியசாமி (27), சந்திரன் (29), தினேஷ்குமார்(23), மணி (25) ஆகிய 12 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு ஆனந்தகுமார் கடத்தப்பட்ட தகவல் கிடைத்து, எஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் மதியம் 1 மணிக்கு கும்பலை ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது.

The post யூடியூப் சேனல் நடத்துவதில் மோதல் வாலிபரை காரில் கடத்திய கும்பல்: சினிமா பாணியில் ஒரு மணி நேரத்தில் சுற்றிவளைப்பு; 12 பேர் கைது; 70 செல்போன், 5 லேப்டாப் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: