ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் நாளை ஜப்பானுடன் இந்தியா மோதல்

சென்னை:7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

நேற்றிரவு நடந்த கடைசி லீக்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த போட்டியில், இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 15 மற்றும் 23வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்தார்.

தொடர்ந்து 36வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஜக்ராஜ் சிங், 55வது நிமிடத்தில் ஆகாஷ் தீப்சிங் பீல்டு கோலும் அடித்தனர். பாகிஸ்தான் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

இதனால் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீக் சுற்று முடிவில் இந்தியா 4 வெற்றி, ஒரு டிரா என 13 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மலேசியா 4 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்தன. தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் தலா 5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருந்தன.

கோல் வித்தியாசம் அடிப்படையில் தென்கொரியா, ஜப்பான் அரைஇறுதியை எட்டியது. பாகிஸ்தான், சீனா அரையிறுதி வாய்ப்பை இழந்தன. இன்று ஓய்வு நாளாகும். நாளை மாலை 6 மணிக்கு முதல் அரையிறுதியில் மலேசியா- தென்கொரியா, இரவு 8.30 மணிக்கு 2வது அரையிறுதியில் இந்தியா- ஜப்பான் மோதுகின்றன்.

பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கான ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது. முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு 5வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா மோதுகின்றன. இதனிடையே நேற்று பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு ஒன்றிய விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாகூர், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் நாளை ஜப்பானுடன் இந்தியா மோதல் appeared first on Dinakaran.

Related Stories: