பக்தர்கள் கும்மியடித்து போராட்டம்: ரங்கம் கோயிலில் பரபரப்பு

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளை தரிசிக்க செல்லும் பக்தர்கள் பெரிய ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், பெரிய திருவடி என்றழைக்கப்படும் பெரிய கருடாழ்வார், ஆரியபடாள் வாசல் மற்றும் அருகே உள்ள சிறிய திருவடி என்றழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயர், கொடி மரம், நாழிகேட்டான் கடந்து நம்பெருமாளை தரிசிக்கலாம். இக்கோயிலுக்கு கடந்த 2015ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, சிறிய திருவடி என்றழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயரை 5 அடி நகர்த்தி சுற்றி வலம் வந்து தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று கூறி பொள்ளாச்சியை சேர்ந்த திருமால் அடியார்கள் குழாம் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் 120 பேர் கடந்த மார்ச் மாதம் ரங்கம் கோயிலுக்கு வந்து கம்பத்தடி ஆஞ்சநேயர் தூண் அருகே அமர்ந்து பஜனை பாடல்கள் பாடி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த 50 பேர் கருடாழ்வார் சன்னதியில் கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் பெருமாளை தரிசித்து விட்டு கலைந்து சென்றனர்.

The post பக்தர்கள் கும்மியடித்து போராட்டம்: ரங்கம் கோயிலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: