திமுக பிரமுகர் கொலையில் தாம்பரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

சென்னை: பெரும்புதூர் அருகே திமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக, 3 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பெரும்புதூர் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் டோம்னிக். திமுக மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக உள்ளனார். இவரது மனைவி குமுதா, எச்சூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களது மகன் ஆல்பர்ட் (30). திமுக இளைஞரணி நிர்வாகியான இவர், எச்சூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எடுப்பது, டிரான்ஸ்போர்ட் மற்றும் தொழிற்சாலை கட்டுமான பணிக்கு தேவையான மண், ஜல்லி சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் ஆல்பர்ட் காரில் தனது நண்பர்களுடன் எச்சூர் பகுதியில் உள்ள ஸ்கிராப் எடுக்கும் தொழிற்சாலைக்கு கடந்த சனிக்கிழமை மாலை சென்றுள்ளார். அப்போது தொழிற்சாலை அருகில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தினை நின்றுகொண்டு பார்வையிட்டார். அப்போது 4 பைக்கில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஆல்பட் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் குண்டு வெடித்து சிதறின. இதனால் அதிர்ச்சியடைந்த ஓடிய ஆல்பர்ட்டை, மர்ம நபர்கள் சுற்றிவளைத்து அரிவாளால் தலை, கழுத்து, முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு, மர்ம கும்பல் தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட் அலறிதுடித்தார். இவரின் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ஆல்பர்ட்டை மீட்டு சிகிச்சைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆல்பர்ட் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 8 தனிப்படை போலீசார் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (21), குரோம்பேட்டையை சேர்ந்த பிரணவ் (20), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகிய 3 பேர், தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திமுக பிரமுகர் கொலையில் தாம்பரம் நீதிமன்றத்தில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.

Related Stories: