புதுவை ஜிப்மரில் கதிரியக்க கருவி செயல்பாட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். இதனை தொடர்ந்து 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10.30 மணியளவில் புதுச்சேரி வந்தடைந்தார். லாஸ்பேட்டை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஜனாதிபதி, கோரிமேடு ஜிப்மர் கலையரங்கம் சென்றடைந்தார். அங்கு புற்றுநோய் பிரிவில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சிலேட்டர் என்ற உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். மாலை 4 மணிக்கு அவர் மணக்குள விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு கவர்னர் தமிழிசை அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.

புதுச்சேரியில் இன்றிரவு ஓய்வெடுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை காலை 6 மணிக்கு கடற்கரையில் நடைபயிற்சி செய்கிறார். காலை 9.15க்கு முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அவர், அதன்பிறகு 10.20 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிடுகிறார். பின்னர் 11.45க்கு புதுச்சேரி அருகிலுள்ள விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் செல்கிறார். அங்கு தியானம் நடக்கும் மாத்ரி மந்திரை பார்வையிடும் அவர், அரவிந்தர் நூற்றாண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

The post புதுவை ஜிப்மரில் கதிரியக்க கருவி செயல்பாட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: