கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது: 73 ஆயிரம் பேர் பங்கேற்றனர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்

சென்னை: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடந்த பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 73 ஆயிரத்து 206 பேர் பங்கேற்றனர். இதையொட்டி, கலைஞரின் நூற்றாண்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக சென்னையில் பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, போட்டியில் பங்கேற்பதற்கான பெயர் பதிவு செய்யும் முறை கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெயர் பதிவு கடந்த மாதம் 20ம் தேதியுடன் நிறைவடைந்து.

மொத்தம் 73,206 பேர் பதிவு செய்திருந்தனர். இந்த மாரத்தான் போட்டியினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி, 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., என 4 பிரிவுகளாக சென்னையில் நேற்று நடத்தப்பட்டன. அதன்படி, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடம் அருகே 42 கி.மீ., தூர மாரத்தான் போட்டியினை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 671 பேர் பங்கேற்றனர். அதேபோல, காலை 5.30 மணிக்கு 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 21 கி.மீ ஓட்டத்தில் 1,991 பேர் பங்கேற்றனர்.

10 கி.மீ ஓட்டத்தில் 6,240 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ ஓட்டத்தில் 64,714 பேர் பங்கேற்றனர். இதில் ஆண்கள் 50,629 பேரும், பெண்கள் 21,514 பேரும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் 1063 பேரும் பங்கேற்றனர். இந்த மாபெரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தொடங்கி வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக ஓடி தீவுத்திடலில் நிறைவு செய்தனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்த 14 இடங்களில் இசை கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதேபோல, வீரர்களுக்கு களைப்பை போக்க தர்பூசணி, பழச்சாறுகள், குளிர்பானங்கள், உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.

இதன் பின்னர், போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கும் நிகழ்வு தீவுத்திடலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் மாரத்தான் போட்டியில் 42 கி.மீ பிரிவில் முதல் பரிசு ஜோதி சங்கர் ராவ், இரண்டாம் பரிசு அஸ்வினி மதன் ஜாதவ், மூன்றாம் பரிசு ஆஷா ஆகியோருக்கு சான்றிதழையும், பரிசு தொகையையும் முதல்வர் வழங்கினார். அதேபோல, 21 கி.மீ பிரிவு, 10 கி.மீ பிரிவு, 5 கி.மீ பிரிவில் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையும், சான்றிதழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், கலைஞர் நூற்றாண்டையொட்டி மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதையடுத்து கின்னஸ் உலக சாதனை சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

The post கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது: 73 ஆயிரம் பேர் பங்கேற்றனர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: