தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ராகுலின் தகுதிநீக்க உத்தரவு வாபஸ் பெறப்படுமா? நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்

புதுடெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவரது எம்பி பதவிக்கான தகுதிநீக்க உத்தரவு வாபஸ் பெறப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்திக்கு உடனடியாக மீண்டும் எம்பி பதவி வழங்க வேண்டும். அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தகுதிநீக்க உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யும் விவகாரத்தில் மக்களவை சபாநாயகரும், மக்களவை செயலாளரும் வேண்டும் என்றே தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க அனுமதி கோரப்பட்டது. அவரும் அடுத்த நாள் தன்னை சந்திக்க வரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி சந்திக்க முயன்ற போது, மக்களவை செயலாளரை சந்தித்து தேவையான ஆவணங்களை வழங்கும்படி கூறிவிட்டதாக கூறப்பட்டது. மக்களவை செயலாளரை அணுகியபோது, தனது அலுவலகத்திற்கு விடுமுறை என்றும், கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துவிட்டால் அவரது அலுவலகத்தின் மூலம் தன்னிடம் சேர்ந்துவிடும் என்று கூறினார். இருவரும் அலைக்கழித்ததால், கடிதத்தை துணைச் செயலாளர் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளோம். நான் அனுப்பிய கடிதத்தில் கையெழுத்து போடப்பட்டுள்ளது. ஆனால் அலுவக முத்திரை குத்தவில்லை’ என்றார்.

சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மக்களவை செயலாளருக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், ‘ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சட்டவிதிகளை பின்பற்றி ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவை செயலக வட்டாரங்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அவர் மீண்டும் எம்பியாக நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தகுதி பெற்றுள்ளார். நாளை (திங்கள்கிழமை) ராகுல் காந்தியின் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்வதற்கான வாய்ப்புள்ளது. இவையாவும் உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை பெற்ற பிறகு, அதில் கூறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்’ என்று கூறின.

எனவே நாளை ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்படும் எனக் கூறப்படும் நிலையில், அவர் நாளை முதலே நாடாளுமன்றத்தில் ஒரு எம்பியாக தனது பணியை தொடர முடியும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை மறுநாள் (ஆக. 8) தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கு அடுத்த 10ம் தேதி விவாதம் மீதான தனது பதிலை பிரதமர் மோடி அளிக்கவுள்ளார். எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால், ஒன்றிய அரசுக்கு நெருக்கடி ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கூட, மணிப்பூர் விசயத்தில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைத்ததற்காக எதிர்கட்சிகளின் முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதப்படுகிறது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விவாதம் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, அவையின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் ராகுல்காந்தியும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை ேதர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் சிக்கல் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மாநிலங்களவையில் நாளை நிறைவேறுமா? டெல்லி சேவைகள் அவசரச் சட்டத்தை மாற்றும் மசோதா மீதான விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளது என்று கூறினார். தொடர்ந்து ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மக்களவையில் ெபரும்பான்மை பலம் உள்ளதால் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நாளை மாநிலங்களவையில் இதே மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இங்கு ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. மொத்தமுள்ள 245 எம்பிக்களில் 123 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் பாஜக கூட்டணியில் 111 எம்பிக்கள் தான் உள்ளனர். அதேபோல ‘இந்தியா’ கூட்டணியில் 99 எம்பிக்கள் உள்ளனர். இரண்டு கூட்டணியும் ஆதரிக்காத எம்பிக்கள் 28 பேர் உள்ளனர். இவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே டெல்லி சேவைகள் சட்டத்தை நிறைவேற்ற முடியும். மேலும் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் எத்தனை எம்பிக்கள் புறக்கணிக்கின்றனர் என்பதும் அப்போது தான் தெரியும்.

இதற்கிடையே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள், மேற்கண்ட மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறியுள்ளன. அதாவது ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் எம்பிக்கள் 9 பேர், தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு எம்பி, பிஜு ஜனதா தளம் கட்சியின் 9 எம்பிக்களையும் சேர்த்தால் 19 எம்பிக்கள் வருகிறது. பாஜக கூட்டணியில் உள்ள 111 எம்பிக்களுடன் 19 எம்பிக்களையும் சேர்த்தால் எம்பிக்களின் ஆதரவு 130 ஆக அதிகரிக்கும். எனவே மாநிலங்களவையிலும் டெல்லி சேவைகள் மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றும் என்று தகவல்கள் கூறுகின்றன.

The post தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ராகுலின் தகுதிநீக்க உத்தரவு வாபஸ் பெறப்படுமா? நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: