ஊர்வலம், இசை- நடனம், ஆன்மீக சொற்பொழிவு ; ஈரோட்டில் வள்ளலார் 200 முப்பெரும் விழா கோலாகலம்

ஈரோடு கொங்கு கலையரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் 200 முப்பெரும் விழா ஊர்வலம், இசை, நடனம், ஆன்மீக சொற்பொழிவு என கோலாகலமாக நடைபெறுகிறது. அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே இறை தத்துவ கோஷத்தை மக்களுக்கு அளித்தவர் அருட்பிரகாச வள்ளலார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அனைத்து உயிர்களுக்காகவும் இரங்கியவர் அவர். 200 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் வந்து உதித்த வள்ளலாரின் ஜனன திருநாள் வருவிக்க உற்ற தினமாக வள்ளலாரின் நம்பிக்கையாளர்களால் அழைக்கப்படுகிறது.

அவர் 156 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தருமசாலையில் முதல் நாளில் பற்ற வைத்த நெருப்பு, அதாவது அடுப்பு இதுவரை அணையாமல் அவரது தருமசாலைக்கு வரும் அனைவருக்கும் பசியாற்றி வருகிறது. இதுபோல் ஒரே கடவுள் கொள்கையாக ஜோதி தரிசனத்தை அவர் காட்டி 152 ஆண்டுகள் ஆகின்றன. உயிர் கொலை கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது என்று வள்ளலார் காட்டிய பாதையை பின்பற்றி வருபவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானவர்கள் உள்ளனர். மலேசியா, சிங்கப்பூரிலும் வள்ளலார் பெருமானின் புகழ் பரப்பும் சமரச சுத்த சன்மார்க்க சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது, உயிர்த்திரள் எல்லாம் ஒன்றெனக்கருதித் தனிப்பெரும் கருணை ஆட்சி நடத்துகிற வள்ளல்பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கம், தருமசாலை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் என வள்ளலார் 200 முப்பெரும் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மாவட்டம் தோறும் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஈரோடு, சம்பத் நகர், கொங்கு கலையரங்கில் நடக்கிறது. காலை 6 மணிக்கு ஈரோடு மாவட்ட அனைத்து சமரச சுத்த சன்மார்க்க அன்பர்கள் அருட்பெருஞ்ஜோதி ஞானதீபம் ஏற்றுகிறார்கள். தொடர்ந்து அகவல் பாராயணம் நடக்கிறது. காலை 7.45 மணிக்கு வள்ளலார் வழித்தோன்றல் கி.உமாபதி, தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 முப்பெரும் விழா சிறப்பு உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஏ.பி.ஜெ.அருள் என்கிற என்.இளங்கோ, வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில தலைவர் டாக்டர் அருள் நாகலிங்கம், செயலாளர் ஜி.வெற்றிவேல், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த சன்மார்க்க சங்க தலைவர் பொன்.சிவஞானம் ஆகியோர் சமரச சுத்த சன்மார்க்க கொடி கட்டுகிறார்கள்.
தொடர்ந்து திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 7.30 மணி அளவில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கிலிருந்து துவங்கி விழா நடைபெறும் கொங்கு கலையரங்கம் வரை 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் வள்ளலார் 200 அருள்நெறி பரப்புரை ஊர்வலம் நடக்கிறது.

காலை 9.30 மணிக்கு வள்ளலார் 200 முப்பெரும் விழா கொண்டாட்டம் நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதிமற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 முப்பெரும் விழா சிறப்பு உயர்நிலைக்குழு தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அரசு முதன்மை செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்துசமய அறநிலையத்துறை சிறப்பு பணி அதிகாரி ஜெ.குமரகுருபரன், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் கு.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையாளர்கள் அ.சங்கர், ந.திருமகன், சி.ஹரிப்பிரியா, மா.கவிதா, ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ், பண்ணாரி கோவில் துணை ஆணையாளர் ரா.மேனகா,முன்னாள் ஆணையாளர் ச.மெய்கண்ட தேவன், இணை ஆணையாளர் அ.தி.பரஞ்ஜோதி, ஈரோடு உதவி ஆணையாளர்கள் மொ.அன்னக்கொடி, சு.சாமிநாதன்,மாவட்ட அறங்காவலர்கள் நியமனக்குழு தலைவர் ஈ.ஆர்.சிவக்குமார். உறுப்பினர்கள் எம்.செல்வகுமார், ச.கீதா, ப.வெ.செல்வராசு, எஸ்.அங்காளஜோதி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் காலை 10.30 மணி அளவில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி. சிவம் பங்கு பெறும் சமரச சுத்த சன்மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு ஞானப்பொழிவரங்கம் நடக்கிறது. இதில் மரணமில்லா பெருவாழ்வு என்ற தலைப்பில் ஈரோடு கதிர்வேல் பேசுகிறார். மாலை 4 மணிக்கு திருவருட்பா பொருள் விளக்கம், இசை மற்றும் ஆடல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜோதி வழிபாடு நடக்கிறது.

நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து வள்ளலார் 200 முப்பெரும் விழாக்குழுவினர், அனைத்து சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.
வள்ளலார் பிறந்த நாள் ‘தனிப்பெருங்கருணை நாள்’ என அறிவித்து சன்மார்க்க அன்பர்கள் இதயங்களில் வீற்றிருக்கும் தமிழக முதல்வர்… அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்தது கோடான கோடி சன்மார்க்க அன்பர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநில தலைவரும், ஈரோடு அருள் சித்தா கிளினிக் நிறுவனமான டாக்டர் அருள் நாகலிங்கம் கூறியுள்ளதாவது: \”அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823-ல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார்.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். வள்ளலார் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார்.

பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. இவ்வாறு அருப்பிரகாச வள்ளலார் ஆற்றிய நற்செயல்களால் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு கோடான கோடி சன்மார்க்க அன்பர்களின் இதயங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு டாக்டர் அருள் நாகலிங்கம் கூறியுள்ளார்…

The post ஊர்வலம், இசை- நடனம், ஆன்மீக சொற்பொழிவு ; ஈரோட்டில் வள்ளலார் 200 முப்பெரும் விழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: