மானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

மானாமதுரை, ஆக.4: மானாமதுரை வீரஅழகர் கோயிலில் நடைபெறும் ஆடி பிரமோற்சவ விழா நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவடைந்தது. மானாமதுரை கீழ்கரையில் சுந்தரராஜ பெருமாள் எனும் வீர அழகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மதுரை அழகர்கோயிலை போல சித்திரை திருவிழா, ஆடித்திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மானாமதுரை வீரஅழகர் கோயிலில் ஆடிமாத பிரமோற்சவ விழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் கருடன், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுந்தரராஜப்பெருமாள் சர்வ அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 29ம் தேதி சுந்தரராஜப் பெருமாள், சௌந்திரவல்லித் தாயாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 30ம் தேதி புஷ்பபல்லக்கு உற்சவமும், 1ம் தேதி தேரோட்டமும் நடந்தது. தேரோட்டத்தின்போது அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தேவி, பூதேவி சமேதராய் சுந்தராஜப் பெருமாள் கோயிலை சுற்றி வலம் வந்தார். நேற்று காலை தீர்த்தவாரி உற்சவத்திற்காக கோயிலில் இருந்து அழகர் குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராமத்தார் மண்டகப்படிக்குப் புறப்பட்டார். அழகரை கிராமத்தினர் மாலை, மரியாதை செய்து மேளதாளம் முழங்க கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நேற்று மாலை மண்டகப்படியிலிருந்து சக்கரத்தாழ்வார் சுவாமி புறப்பாடாகி புனித தீர்த்தக்குளமான அலங்கார குளத்துக்குச் சென்றடைந்தார். அங்கு சுவாமிக்கு கோபிமாதவன் தலைமையில் அர்ச்சகர்கள் சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதன்பின் இரவு மண்டகப்படியில் வீர அழகருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

The post மானாமதுரை வீரஅழகர்கோயில் பிரமோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: