அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் குறைகேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: காரில் இருந்து இறங்கி வந்ததால் நெகிழ்ச்சி

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் எம்ஜிஆர் நகர், போரூர், அசோக்நகர் பகுதியில் நடந்து வரும் 2ம் கட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். கடைசியாக அசோக்நகர் பகுதியில் ஆய்வு முடிந்த பிறகு காரில் ஏறி புறப்பட தயாரானார். அப்போது அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சாலையில் காத்திருந்ததை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தார். பின்னர் அசோக்நகர் பகுதியில் மழை காலத்தில் இருக்கும் பாதிப்புகளை சி.ஆர்.சரஸ்வதி முதல்வரிடம் நேரடியாக தெரிவித்தார்.முதல்வருடன் நடந்த சந்திப்பு பற்றி சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது “வேறொரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வீட்டுக்கு அப்போதுதான் திரும்பினேன். நான் வந்தபோது முதல்வர் இந்த பக்கமாக செல்வதாக மக்கள் கூறினர்.

நம் எல்லோருக்கும் அவர் முதல்வர் தானே, அதனால் மரியாதை நிமித்தமாக நானும் சாலையிலேயே நின்றுவிட்டேன். காரில் இருந்தபோது என்னை பார்த்த முதல்வர், இறங்கி வந்து ‘இங்கதான் இருக்கீங்களா’ என நலம் விசாரித்தார். நான் எதிர்பார்க்கவேயில்லை அப்போது. ‘ஏன் சார், நானே வந்திருப்பேனே’ என்றேன். பரவாயில்லை என்றவர், இப்பகுதியின் குறைகளை கேட்டறிந்தார். நான் இங்குள்ள கழிவுநீர் குறித்த குறைகளை சொன்னேன். அனைத்தையும் கேட்டுவிட்டு ‘அதை பார்வையிடத்தான் நானே நேரடியாக வந்தேன். நிச்சயம் சரிசெய்யப்படும்’ என்றார். முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்கிறேன். முதல்வராக அவரை பார்ப்பதிலும், இறங்கி நின்று பதில் சொல்லிவிட்டு அவர் சென்றதும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

The post அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் குறைகேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: காரில் இருந்து இறங்கி வந்ததால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: