திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா கலெக்டர் ஆய்வு

 

திருத்தணி : ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார்.திருத்தணி முருகன் கோயிலில், 7ம் தேதி முதல், 11ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், துணை ஆணையர் விஜயா, வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியோர் மேல்திருத்தணி நல்லாங்குளம், மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள், மலைக்கோவில் போன்ற இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கலெக்டர் கூறியதாவது, ஆடிக்கிருத்திகை விழாவிற்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூடுதல் வசதிகள் செய்து வருகிறோம். பக்தர்கள் வசதிக்காக, 480 சிறப்பு பேருந்துகள், மூன்று மின்சார ரயில்கள், 48 குளியல் அறைகள், 110 கழிப்பறைகள், நகராட்சி சார்பில், 250 துப்புரவு தொழிலாளர்கள், கோயில் நிர்வாகம் சார்பில், 450 துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். சுகாதார தறையின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

கோயில் வளாகம் தேவஸ்தான விடுதிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்கள் என மொத்தம், 150 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசிப்பதற்கு க்யூ லைன் அமைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனம், பக்தர்கள் புகார்கள் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படவுள்ளது. இதில், வாட்ஸ்ஆப் மூலம் புகார் அனுப்பலாம். மொத்தத்தில் ஆடிக்கிருத்திகை விழா முழு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என்றார்.

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: