தஞ்சாவூரில் ஜிஎஸ்டி அதிகாரியாக இருப்பவர் ராஜஸ்தான் மாநிலம், டோல்பூரை சேர்ந்த தர்மேந்திர சிங் (23). தூத்துக்குடியில் சுங்கத்துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் அரியானா மாநிலம், ரிவாரியை சேர்ந்த ராகுல்யாதவ் (32). ராஜஸ்தான் மாநிலத்தில் முத்துபெட் யூனிட் சுங்கத்துறை அதிகாரி சுபேசிங் (29).
மதுரையில் சிபிஐ அதிகாரியாக இருப்பவர் அரியானா மாநிலம், குருகிராமை சேர்ந்த தினேஷ்குமார் (24). நண்பர்களான இவர்கள் 4 பேரும் மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்ற மதுபானக்கூடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்றனர். நீண்ட நேரம் மது அருந்தியதாக தெரிகிறது. அதற்கான கட்டணத்தை டெபிட் கார்டு மூலம் தர்மேந்திரசிங் செலுத்தியுள்ளார். இதற்கு சேவை வரி ரூ.60 எடுக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த 4 பேரும், ஊழியர் பாண்டியிடம், ‘‘நாங்கள் வாடிக்கையாளர்கள், எங்களுக்கு ஏன் சர்வீஸ் கட்டணம் எடுத்தீர்கள்’’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே, மன்ற மேலாளர் ஆனந்தபாபு (38), விளக்கம் அளித்துள்ளார். அவர்கள் ஆனந்தபாபுவை இந்தியில் ஆபாசமாக திட்டிள்ளனர். ஆத்திரத்தில் அருகில் இருந்து மதுபாட்டிலை எடுத்து அவரது மண்டையில் அடித்தனர். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. அவரை மன்ற ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தல்லாகுளம் போலீசார், ஆபாசமாக திட்டியதுடன், மது பாட்டிலால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
The post எங்களிடமே சர்வீஸ் கட்டணம் வசூலிப்பியா? இந்தியில் திட்டி சரக்கு பாட்டிலால் கிளப் மேலாளர் மண்டை உடைப்பு: சிபிஐ, சுங்கத்துறை, ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது appeared first on Dinakaran.
