சென்னையில் 5 இடங்கள், கோவையில் 2 இடங்களில் ஆவின் பாலை பாட்டில்களில் அடைத்து விற்பது குறித்து சர்வே: ஆவின் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை தவிர்க்க ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆவின் நிறுவனம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறிக்கையை பார்த்த நீதிபதிகள், டாஸ்மாக் மட்டும் மதுவை பாட்டிலில் விற்கும் போது ஆவின் பாலை ஏன் விற்க முடியாது. டாஸ்மாக் பாட்டிலை வாங்கிய மதுபிரியர்கள் குடித்து விட்டு ஆடிக்கொண்டே பாட்டிலை கையாளும் போது சாதாரண மக்களால் ஏன் அதை கையாள முடியாது என்று கேள்வி எழுப்பியதுடன் பொதுமக்களிடம் மீண்டும் சர்வே எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். வழக்கு கடந்த 27ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாதிரி சர்வே எடுக்க தயாராக இருப்பதாக ஆவின் நிர்வாக இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சென்னையில் திருமங்கலம் சாலை, வடக்கு உயர் நீதிமன்ற காலனி, குமாரசாமி நகர், திருநகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகிய இடங்களில் பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஆவின் நிர்வாக இயக்குநரை இந்த நீதிமன்றம் தானா முன்வந்து சேர்க்கிறது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post சென்னையில் 5 இடங்கள், கோவையில் 2 இடங்களில் ஆவின் பாலை பாட்டில்களில் அடைத்து விற்பது குறித்து சர்வே: ஆவின் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: