மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நிற்கவேண்டும்: பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தை மேல்மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஒரத்தி, அச்சரப்பாக்கம், செய்யூர், சூனாம்பேடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றவர்களும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாக செங்கல்பட்டுக்கு அடுத்து மேல்மருவத்தூரில் கூடுதலான ரயில்கள் நின்றுசெல்கின்றன. இதனால் பக்தர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தின்போது ரயில்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கிய பிறகு இந்த வழியாக இயக்கக்கூடிய ரயில்களில் ஒரு சில ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. டெல்டா மாவட்டம் செல்லக்கூடிய உழவன் எக்ஸ்பிரஸ் (இரு மார்க்கம்), மேற்கு மாவட்டம் செல்லக்கூடிய சேலம் எக்ஸ்பிரஸ் (இரு மார்க்கத்திலும்) சிலம்பு எக்ஸ்பிரஸ் (சென்னை மார்க்கத்தில்) காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் (சென்னை மார்க்கத்தில்) ஆகிய ரயில்கள் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள், செங்கல்பட்டு அல்லது விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறி மேல்மருவத்தூர் வரவேண்டிய நிலைமை உள்ளது.

எனவே மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து இயக்கக்கூடிய பகல் நேர ரயில்களான வைகை எக்ஸ்பிரஸ், இரவு நேரத்தில் இயங்கக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை மற்றும் ராக்போர்ட் ஆகிய ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்றுசெல்வதன் மூலம் இந்த ரயில் நிலையத்துக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பயணிகளின் சிரமத்தையும் தவிர்க்க முடியும். எனவே எதிர்வரும் காலத்தில் புதிய கால அட்டவணை தயாரிக்கும் நிலையில் உள்ள ரயில்வே நிர்வாகம் இதை கருத்தில்கொண்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் மேற்குறிப்பிட்ட ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட எடுக்க வேண்டும்.

சென்னை புறநகர் விரிவாக்கம் தற்போது மேல்மருவத்தூர் வரை விரிவடைந்துள்ள நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் மேல்மருவத்தூர் வரை நீட்டிப்பு செய்ய தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நிற்கவேண்டும்: பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: