தலைமை நீதிபதி பற்றி அவதூறு எழுத்தாளர் பத்ரி சிறையில் அடைப்பு

பெரம்பலூர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசிய பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பத்ரி சேஷாத்ரி என்ற பத்ரி நாராயணன்(53). கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பதிப்பாளராகவும், அரசியல் விமர்சகராகவும், எழுத்தாளராகவும் உள்ளார். இவர் மணிப்பூர் மாநிலப் பிரச்சனை குறித்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில் மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ன செய்ய முடியும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியை கொடுத்து அனுப்பி வைக்கலாம் என விமர்சித்து பதிவிட்டிருந்தார். மேலும் யூ-டியூப் சேனலில் பேட்டியும் அளித்திருந்தார்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு(37), கடந்த 27ம் தேதி குன்னம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து குன்னம் போலீசார் பத்ரி சேஷாத்ரி மீது, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல், வார்த்தைகள் மூலம் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், பொதுவில் அச்சத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தனிப்படையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள பத்ரி சேஷாத்ரி வீட்டுக்கு சென்று அவரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனைக்குப்பின் குன்னம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி கவிதா அவரை வரும் 11ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பத்ரி சேஷாத்ரியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து பாஜகவினர் கோஷமிட்டனர்.

The post தலைமை நீதிபதி பற்றி அவதூறு எழுத்தாளர் பத்ரி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: