சத்தியமங்கலம் பகுதியில் தென்னைகள் மீது மர்ம நோய் தாக்குதல்

*விவசாயிகள் கவலை

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் மட்டைகள் காய்ந்த நிலையில் உள்ளதோடு, ஒரு விதமான மர்ம நோய் தாக்கியுள்ளதால் தென்னைகளில் தேங்காய்கள் பிடிக்காமல் குரும்பைகள் உதிர்ந்து விழுகின்றன.

இதனால் மரம் முழுவதும் காய்ந்து சருகாக காட்சியளிப்பதோடு தென்னை மட்டைகள் கீழே விழுகின்றன. மரங்களில் முழுவதுமாக நோய் பரவியுள்ளதால் விவசாயிகள் மர்ம நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் வேளாண் துறையினர் இதுவரை தென்னைமர நோய் தாக்குதல் குறித்து அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

700 தென்னை மரங்கள் வைத்துள்ள ஒரு விவசாயி தனது தென்னந்தோப்பில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 50 ஆயிரம் தேங்காய்கள் மகசூல் கிடைத்த நிலையில், தற்போது தென்னை மரங்களில் மர்மநோய் தாக்குதல் காரணமாக 10 ஆயிரம் தேங்காய்கள் மட்டுமே கிடைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய மருந்துகளை பரிந்துரை செய்து நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதோடு நோய் தாக்குதலுக்கு ஆளான தென்னை மரங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் பகுதியில் தென்னைகள் மீது மர்ம நோய் தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: