குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் கால்நடை சந்தை சுங்கம் வசூலிக்க எதிர்ப்பு

 

ஈரோடு, ஜூலை 29: அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் கால்நடை சந்தையில் சுங்கம் வசூலிக்க அனுமதிக்க கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொங்கு இளைஞர் பேரவை தலைவர் ராஜூ என்பவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, அந்தியூர் ஒன்றியம் புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தையுடன் கூடிய தேர்த்திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. விவசாயிகள் நலன் கருதி கடந்த ஆண்டுகளில் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் கால்நடைகளுக்கு சுங்கம் வசூலிப்பதை கலெக்டர் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு ரத்து செய்தது.

ஆனால் இந்தாண்டு திருவிழாவிற்கான கால்நடை சந்தைக்கு சுங்கம் வசூலிக்க ஏலம் நடைபெற்றுள்ளது. ஏலம் நடத்த கூடாது என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. சுங்கம் வசூல் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கால்நடைகளுக்கான சுங்கம் வசூல் செய்வதை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் கால்நடை சந்தை சுங்கம் வசூலிக்க எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: