ஆர்பிஎப் போலீசார் தீவிர கண்காணிப்பு

 

சேலம், ஜூலை 28: சேலம் கோட்டத்தில் முறைகேடாக ரயில் டிக்கெட் விற்பனையை தடுக்க ஆர்பிஎப் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனர். ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்து முறைகேடாக விற்பதை தடுக்க ஆர்பிஎப் போலீசார், நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கும் ஏஜென்சிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல், ஐஆர்சிடிசியில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பண பரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து, அவர்களை கண்காணித்தனர். இந்த வகையில், கடந்த 6 மாதத்தில் சேலம் ரயில்வே கோட்டத்தல் முறைகேடாக ரயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 30 வழக்குகளை ஆர்பிஎப் போலீசார் பதிவு செய்தனர். இந்த 30வழக்குகளிலும், முறைகேடாக கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ₹8 லட்சம் மதிப்பிலான இ-டிக்கெட்டுகளை ஆர்பிஎப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், முறைகேடு டிக்கெட் புக்கிங் செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு இயந்திரங்களை கைப்பற்றினர். தொடர்ந்து ஆர்பிஎப் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுபற்றி ஆர்பிஎப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில் டிக்கெட்டை முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்று வரும் நபர்களை கண்காணித்து கைது செய்கிறோம். இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவது குற்றச் செயலாகும். அதனால், பயணிகளும் முறையாக டிக்கெட் புக்கிங் செய்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்,’’ என்றனர்.

The post ஆர்பிஎப் போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: