நாகர்கோவில் மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் ேபாட்டியின்றி தேர்வு

நாகர்கோவில், ஜூலை 28: நாகர்கோவில் மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவுக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை மாநகராட்சி கூட்டரங்கில் நடந்தது. தேர்தலை ஆணையரும், தேர்தல் அலுவலருமான ஆனந்த் மோகன் நடத்தினார். இதில் மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், முத்துராமன், செல்வக்குமார் உள்பட 37 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த குழுவின் 9 உறுப்பினர் பதவிக்கு 9 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். எனவே அவர்கள் 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 12வது வார்டு உறுப்பினர் சுனில் குமார் (பாஜக), 20வது வார்டு ஆன்றோனைட் ஸ்னைடா (பாஜக), 30வது வார்டு சந்தியா (காங்கிரஸ்), 25வது வார்டு அக்ஷயா கண்ணன் (அதிமுக), 9வது வார்டு ராம கிருஷ்ணன் (திமுக). 43வது வார்டு விஜயன் (திமுக), 18வது வார்டு அமல செல்வன் (திமுக), 42வது வார்டு ஸ்டாலின் பிரகாஷ் (திமுக), 49வது வார்டு ஜெய விக்ரமன் (திமுக) ஆகியோர் ேபாட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் ஆனந்த் மோகன் வழங்கினார்.

மேயர் மகேஷ் அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மேயர் மகேஷ் பேசுகையில், மாநகராட்சி மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலை தமிழ்நாடு முழுவதும் உற்று நோக்கியது. ஆனால் அதன்பின்னர் நடைபெறும் மாநகராட்சி தேர்தல்கள் அனைத்திலும் உறுப்பினர்கள் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டு தேர்தலிலும் எந்தவித பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளோம் என்றார்.

குழு செயல்படுவது எப்போது?
தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பின்னர், அந்த குழுவின் சட்டப்படியான அதிகாரம் குறித்து ஆணையர் ஆனந்த் மோகன் விளக்கினார். மேலும் கவுன்சிலர்களின் சந்தேகங்களுக்கும் பதில் கூறினார். அப்போது அவர் கூறுகையில், வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக தேர்வான 9 கவுன்சிலர்களும், 9 அதிகாரிகளும் மேயர் மகேஷ் தலைமையில் செயல்படுவார்கள். 19 பேர் கொண்ட இந்த குழுவிற்கு இன்னும் 9 அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் பின்னர் இந்த குழு செயல்பாட்டுக்கு வரும். இந்த மேல்முறையீட்டு குழு முடிவில் கருத்துவேறுபாடு இருந்தால், 30 நாட்களுக்குள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.

The post நாகர்கோவில் மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் ேபாட்டியின்றி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: