கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற “நவீன தமிழ்நாட்டின் சிற்பி-கலைஞர்“ குழுக்கூட்டம்

சென்னை:

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில், இன்று (24.7.2023) காலை 10.30 மணியளவில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “நவீன தமிழ்நாட்டின் சிற்பி-கலைஞர்“ குழுக்கூட்டம் இக்குழுவின் தலைவர், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலும், இக்குழுவின் இணைத் தலைவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்ழுவின் உறுப்பினர் – செயலர், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இஆப., வரவேற்புரை ஆற்றிய பின், இக்குழுக் கூட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் உரையாற்றுகையில்:
விவசாயத்தில் முன்னணி மாநிலம், மருத்துவச் சேவைகள் வழங்குவதில் முன்னணி மாநிலம், உயர் கல்வியில் முன்னணி மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், சட்டம் ஒழுங்கைக் காப்பதில் முன்னணி மாநிலம், அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வறுமையை தீர்த்ததில் முன்னணி மாநிலம், சாதி, மதவேறுபாடுகள் நீங்கிட இடஒதுக்கீடுகள் தந்து, சமத்துவ-சமுதாயம் படைப்பதில் முன்னணி மாநிலம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, விவசாய உற்பத்திகள் பெருக, வழிவகுத்ததில் முன்னணி மாநிலமாக உள்ளது எனத் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே பணக்கார மாநிலமான மகாராஷ்ட்ராவிலும், மேற்கு வங்காளத்திலும்கூட உணவு உற்பத்தி இல்லாததால், பஞ்சம் ஏற்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், “IR8“ என்று நெல் வகையினை அறிமுகப்படுத்தி, ஏக்கருக்கு 45 மூட்டைகள் நெல் உற்பத்தி செய்யக்கூடிய நிலையை உருவாக்கியதால், தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். குடிசைப் பகுதிகள் இல்லா தமிழகம் எனக் கொள்கை வகுத்தவர் கலைஞர், தமிழ்நாட்டில், கட்டட வடிவமைப்பில் நவீனங்களை புகுத்தியவர் கலைஞர், தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் போன்றவைகளே சாட்சிகள் ஆகும்.

1971இல், முதன் முதலாக, சிப்காட் தொழில் வளாகங்களை ஏற்படுத்தி, 1997இல், தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலைகளை உருவாக்கி. “சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்“ எனப் புகழ்பெற செய்தவர் கலைஞர், நெடுஞ்சாலைத்துறையை நவீனமயம் ஆக்கியவர் கலைஞர், தமிழ்நாட்டில் முதன் முதலில் மேம்பாலங்கள் அமைத்து நெடுஞ்சாலையை நவீனப்படுத்தியவர் கலைஞர். 1973 ஜூலை 1இல், சென்னை, அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன் முதல் உருவாக்கி, தமிழ்நாட்டு இளைஞர்கள், ஐ.டி. தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர். இந்தியாவிலேயே முதன்முதலாக 1969இல், காவல் ஆணையம் அமைத்தவர் கலைஞர். 1989இல், மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என கொள்கை வகுத்தவர் கலைஞர். 1999இல், “தமிழ்நெட்“ என கணினி மாநாடு நடத்தி, தமிழை கணினியில் இடம்பெறச் செய்தவர் கலைஞர்.

“கலைஞர் கைபடாத கலையில்லை, கலைஞர் கைபடவில்லை என்றால்; அது கலையே இல்லை!.
-என்று சொல்லக்கூடிய வகையில் அனைத்தையும் நவீன மயமாக்கிய சிற்பி கலைஞர் என்று அறுதியிட்டுக் கூறலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்கள்.

அமைச்சரின் உரையை தொடர்ந்து, இக்ழுவின் பல்வேறு உறுப்பினர்கள் அவரவர்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள்.
நீண்ட விவாதத்திற்குப் பின்னர் கீழ்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
1) முத்தமிழறிஞர் கலைஞர் மாண்புமிகு முதலமைச்சராகவும் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கட்டப்பட்டட முக்கியமான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் (Iconic buildings and Infrastructure) ஆகியவற்றின் நோக்கம் மற்றும் பயன்பாடு போன்ற விவரங்களுடன் தொகுத்து ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் ஆவணம் உருவாக்குதல்.
2) முத்தமிழறிஞர் கலைஞர் மாண்புமிகு முதலமைச்சராகவும் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கட்டப்பட்ட 100 கட்டங்களில் புனரமைப்பு மற்றும் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளுதல். இப்பணிக்களுக்கான கால அளவு மற்றும் நிதித் தேவையினை நிர்ணயம் செய்தல்.
3) கலைஞர் காலத்து கட்டடப் பணிகள் குறித்த சாதனைகளை விளக்கிக்கூறும் கூட்டங்கள் / விழாக்கள், குறும்படம் வெளியிடுதல்.
4) மிக முக்கிய கட்டடங்களில் (land mark buildings) மின் ஒளி விளக்கு அலங்காரம் செய்தல்.
5) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களில் உள்ள கல்வெட்டுகளை சீரமைத்தல்.
6) கலைஞர் நூற்றாண்டு விழா சார்ந்த கருத்தரங்கம் மற்றும் பயிற்சிகள்
7) கலைஞர் நூற்றாண்டு விழாக்காலமான ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்படும் மற்றும் திறந்து வைக்கப்படும் முக்கிய கட்டடங்களின் நோக்கம் மற்றும் பயன்பாட்டினை விளக்கும் குறும் படங்களை, பொது இடங்கள் மற்றும் திரை அரங்குகள் போன்றவற்றில் ஒளி பரப்பு செய்து மக்கள் அறியச் செய்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்குழுவின் உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துகளை அவ்வப்போது தெரிவிக்கும்படி வலியுறுத்தபட்டனர்.

இக்குழுக் கூட்டத்தில், இக்ழுவின் உறுப்பினர்களான முனைவர் இராம சீனிவாசன், முனைவர் ஜோதி சிவஞானம், ரூப்மதி, ஓவியர் மருது, கவிஞர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்தபதி செல்வநாதன் ஆகியோர்கள் பங்கு பெற்றார்கள்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற “நவீன தமிழ்நாட்டின் சிற்பி-கலைஞர்“ குழுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: