பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் முதல் ஆடி வெள்ளியில் குவிந்த பெண் பக்தர்கள்

பெரியபாளையம்: பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் இன்று முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர். இதில் பலர் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்தனர். பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பவானியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 17ம் தேதி ஆடித் திருவிழா துவங்கியது. இவ்விழா தொடர்ந்து 14 வாரங்கள் நடைபெறுகிறது. இந்த ஆடி திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை இரவு ஏராளமான வாகனங்களில் வந்து தங்கி, ஞாயிறன்று மொட்டை அடித்து, வேப்பிலை ஆடை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயிலில் இன்று முதல் ஆடி வெள்ளிக்கிழமை என்பதால், அதிகாலை கோ பூஜை உள்பட பவானியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என பெண்களிடையே நம்பிக்கையாக உள்ளது. இதனால் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதயாத்திரையாக வந்து, புனித நீராடி, மஞ்சள் உடை உடுத்தி, கருவறையில் உள்ள மூலவர் பவானியம்மனை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.

பவானியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், பெரியபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளிலும் போலீசார் மேற்கொண்டனர். இன்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ் உள்பட கோயில் ஊழியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் முதல் ஆடி வெள்ளியில் குவிந்த பெண் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: