பம்மல் மண்டல அலுவலக நுழைவாயிலில் கலைஞர் முழு உருவ வெண்கல சிலை: மண்டலக்குழுவில் தீர்மானம்

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் பம்மல் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பம்மல், ஜீவமாதா தெருவில் புதிதாக 3 மின்கம்பங்கள் அமைத்து மின்பாதை ரூ.48,960 மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. கிழக்கு மாடவீதி, உய்யாலியம்மன் கோயில் தெரு, திருநீர்மலை வைத்தியக்கார தெரு ஆகிய பகுதிகளில் சிறுபாலம் மற்றும் கால்வாய் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் சீர் செய்யப்பட உள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் திருநீர்மலை சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்துளை கிணற்றுடன் பைப் லைன் இணைப்புகளை கொடுத்து உய்யாலியம்மன் கோயில் தெருவில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இணைக்கும் பணி ரூ.7 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பம்மல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரிநேசன் கலந்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனகாபுத்தூர் பகுதிகளில் 52 உயர் கோபுர மின்விளக்குகள் ஒரு வருட காலத்திற்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வரும் திராவிட இயக்க சிந்தனைகளை திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் விதைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது, தமிழ்மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தது, மாநில உரிமைக்காக போராடியது, நவீன தமிழகத்தை மட்டுமல்ல, நவீன இந்தியாவை உருவாக்கியது என புகழப்படும் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவை போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலமான பம்மல் அலுவலகத்தின் நுழைவாயிலில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க கவுன்சிலர்கள் மூலம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், குழு தலைவர்கள் நரேஷ் கண்ணா, மதினா பேகம், சண்முக சுந்தரி, 1வது மண்டல உதவி ஆணையாளர் மாரிச்செல்வி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

The post பம்மல் மண்டல அலுவலக நுழைவாயிலில் கலைஞர் முழு உருவ வெண்கல சிலை: மண்டலக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: