பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய விஏஓ, பெண் கிராம உதவியாளர் கைது

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் கங்கதேவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மகன் ராஜ்குமார். இவர் தனக்கு உரிமையான நிலத்திற்கு ஆன்லைன் மூலமாக தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தினை பரிந்துரை செய்ய கங்கதேவன் குப்பம் கிராம நிர்வாக அலுவலர் பாலு மற்றும் கிராம உதவியாளர் பொன்னியம்மாள் ஆகியோரை அணுகியுள்ளார். பட்டா மாறுதல் செய்ய அவர்கள் ராஜ்குமாரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இது சம்பந்தமாக ராஜ்குமார் நேற்று முன்தினம் செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் நேரடி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் பிரியா வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரிடம் ரசாயணம் பூசிய 5 ஆயிரம் பணத்தை விஏஓவிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர். அப்பணத்தை ராஜ்குமார் விஏஓ பாலு, கிராம உதவியாளர் பொன்னியம்மாள் ஆகியோரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களை செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய விஏஓ, பெண் கிராம உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: