எளாவூர் சோதனைசாவடியில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைசாவடியில் இன்று அதிகாலை வாகன சோதனையின்போது, ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் ஒருங்கிணைந்த நவீன சோதனைசாவடி உள்ளது. இதன் வழியே ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, கொல்கத்தா உள்பட பல்வேறு வடமாநிலங்களுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றி சென்று வருகின்றன.

இவ்வழியாக ஆந்திராவில் இருந்து கார், வேன், அரசு பேருந்துகளில் சென்னை, கோவை, திருச்சி போன்ற தென்மாவட்டங்களுக்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதைபொருள் மற்றும் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தலும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், எளாவூர் சோதனைசாவடி பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதல் எளாவூர் சோதனைசாவடி பகுதியில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எஸ்ஐ குமணன் தலைமையில் போலீசார் வெளிமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், பேருந்து உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். கார் டிக்கியில் பதுக்கி 20 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் (24), சரண் (22), வசந்த் (22) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் ஆந்திராவில் இருந்து சொகுசு கார் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் 20 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எளாவூர் சோதனைசாவடியில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: காரில் கடத்தி வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: