பாஜ மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவில் ஹிட்லர் ஆட்சிதான்: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த நல்லசிவனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: தனியார் பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, கலைக்கல்லூரிகளில் கல்விக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வெற்றி கண்டவர் நல்லசிவன்.

பள்ளிகள், கல்லூரிகளில் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக் கூடாது என அவர் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியவர். கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பாஜ மோடி அரசு விவசாயிகளுக்கோ, இளைஞர்களுக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் தான் தற்போது பொது சிவில் சட்டத்தை பாஜ கையிலெடுத்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மோடியும், அமித்ஷாவும் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டும் வெற்றி பெற முடியவில்லை. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜ வெற்றி பெற்றால் ஜெர்மனியில் ஹிட்லர் செய்த ஆட்சியைப் போல் தான் இருக்கும். எனவே பாஜவை தோற்கடிக்க தமிழகத்தில் அனைவரும் சபதமெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நல்லசிவன் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீடு, நினைவு ஜோதி எடுத்து வருதல், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.

The post பாஜ மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவில் ஹிட்லர் ஆட்சிதான்: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: