பஞ்சு இறக்குமதிக்கு 11% ஜிஎஸ்டி ஒன்றிய அரசு பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில்: `சைமா’ குற்றச்சாட்டு

கோவை: ஒன்றிய அரசின் பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில் நகர்ந்து வருவதாக சைமா, குற்றச்சாட்டி உள்ளது. தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிஷாம், பொதுச்செயலாளர் செல்வராஜ், அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் முதுகெலும்பாக ஜவுளித்தொழில் உள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மட்டுமே 40 சதவீதம் ஜவுளித்தொழில் உள்ளது. பாரம்பரியமான இந்த ஜவுளித்தொழில் தற்போது படுவேகமாக சரிவு நிலையை சந்தித்து வருகிறது. டெக்ஸ்டைல் மில்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருள், பஞ்சு. இதன் விலை அபரிமிதமாக உயர்ந்துவிட்டது. சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, இந்திய பஞ்சு விலை, ஒரு பேல்-க்கு ₹2 ஆயிரம் அதிகமாக உள்ளது. உள்நாட்டில் போதிய அளவில் உற்பத்தி இல்லாத காரணத்தாலும், தரம் குறைவாக இருப்பதாலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இப்படி இறக்குமதி செய்து, தயாரிக்கும் நூல்களை விற்க முடியாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இது, பஞ்சாலைகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, பருத்தி விலைக்கும், நூல் விலைக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. இத்தொழிலில் ஏற்பட்டுள்ள தொடர் நசிவு காரணமாக, பல பஞ்சாலைகள் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன. பஞ்சு மீதான இறக்குமதி வரி 11 சதவீதம் என்பது, இத்தொழிலுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது. இவ்வளவு வரி செலுத்தி, பஞ்சு இறக்குமதி செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது. எனவே, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ேளாம். ஆனால், ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக நிலை மந்தமாக உள்ளது. இதனால், ஜவுளிப்பொருட்களின் ஆர்டர் பெருமளவு குறைந்துவிட்டது. குறிப்பாக, திருப்பூருக்கு வரும் ஆர்டர்களில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துவிட்டது. ஜவுளி ஏற்றுமதியும் பெருமளவு சரிந்துவிட்டது. முன்பெல்லாம் 1000 கன்டெய்னர்களில் ஜவுளி ஏற்றுமதி நடக்கும். ஆனால், தற்ேபாது 200 கன்டெய்னர்கள் கூட செல்வதில்லை. ஒட்டுமொத்தமாக, இந்திய அளவில் ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு 23 சதவீதம் குறைந்துவிட்டது.

இது, கடினமான காலமாக உள்ளது. 3 லட்சம் பேல்களை மட்டும் வரியில்லாமல் இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை, 10 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதையும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை. வங்கிக்கடன் காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இதையும் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களினால் ஜவுளித்தொழிலில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. பல மில்கள் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம் என்ற நிலை உள்ளது. எனவே, ஜவுளித்ெதாழில் சீரடைய வேண்டுமென்றால், ஒன்றிய அரசு, பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும். வங்கிக்கடன் காலத்தை, மேலும் 2 ஆண்டு காலம் நீடித்து தர வேண்டும். “இ.சி.ஜி.எல்.எஸ்’’ என்ற வங்கிக்கடன் விதிகளையும் மேலும் 2 ஆண்டுகாலம் நீட்டித்து தர வேண்டும். இதுதொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம். மாநில அரசும் மின்கட்டணத்தில் சில சலுகை அறிவித்தால், இத்தொழில் மீண்டு வர உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, “பீக் ஹவர்’’ கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பஞ்சு இறக்குமதிக்கு 11% ஜிஎஸ்டி ஒன்றிய அரசு பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில்: `சைமா’ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: