யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தத்தளிக்கிறது டெல்லி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைவரை அனைத்து பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரசேதம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய யமுனை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொழிவு தீவிரமடைந்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை கடந்த 1978ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 45 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லி நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் டெல்லி நகரம் முழுவதும் புகுந்துள்ளது. நேற்றைய தினத்தை பொறுத்தவரை யமுனையின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 208.48 மீட்டர் என்கிற அளவை தொட்டு பாய்ந்தோடியது.

முதல்வர் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லம், தலைமை செயலக வளாகம் போன்ற இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகள், மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை இன்று வரை மூடப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 16 குழுக்கள் டெல்லியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அருகில் உள்ள நொய்டா பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதலுதவி மையங்களில் சேர்க்கப்பட்டு இருந்த 40 நோயாளிகள் எல்என்ஜேபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 3 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூடிவிட்டதால் குடிதண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தத்தளிக்கிறது டெல்லி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: