பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 17ம் தேதி ஆடி திருவிழா துவக்கம்: போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற பவானி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வரும் 17ம் தேதி துவங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 14 வாரங்கள் நடைபெறுகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள்வந்து சனிக்கிழமை இரவு அங்குள்ள தற்காலிக குடிலில் தங்கியிருந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்தும் முடி காணிக்கை, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம்வந்தும் ஆடு, கோழிகளை நேர்த்தி கடனாக செலுத்துவார்கள்.இந்த நிலையில், ஆடி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பது அளிப்பது குறித்து காவல் துறை மற்றும் பிற துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், சத்தியமூர்த்தி, கோயில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் சாலையோரத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், கோயில் வளாகத்தில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும், சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். போக்குவரத்துக்கும் பக்தர்களுக்கும் இடையூறு இன்றி கடைகள் வைக்கவேண்டும். கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 17ம் தேதி ஆடி திருவிழா துவக்கம்: போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: