ஆட்டோ ரிக்‌ஷா வாங்க 500 பெண் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்‌ஷா வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு புதிய ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தற்போது 1,74,230 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ ரிக்‌ஷா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்பினை உருவாக்கிடவும், அவர்களின் வருமானம் ஈட்டும் திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்‌ஷா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் 141 பயனாளிகளில் 10 பேருக்கு புதிய ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான பதிவு சான்று மற்றும் அனுமதி ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

The post ஆட்டோ ரிக்‌ஷா வாங்க 500 பெண் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: